Connect with us

இதயமே….இதயமே….உன் மௌனம் என்னை கொல்லுதே…!

latest news

இதயமே….இதயமே….உன் மௌனம் என்னை கொல்லுதே…!

தமிழ்சினிமா உலகில் காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். 1500 தமிழ்சினிமா பாடல்கள், 5000 பக்திப்பாடல்கள், 100 தொலைக்காட்சித் தொடர்களுக்கான பாடல்களை எழுதியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தார். இவரது வயது 65.

இவர் சிதம்பரம் அருகே உள்ள ஆனைக்காரன்சத்திரத்தில் 6.2.1956ல் பிறந்தார். நன்னிலத்தில் படிப்பை முடித்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர், தனசேகர், ராஜசேகர், கவிஞர் சேகர், கவிஞர் சந்துரு என பல பெயர்களில் கவிதைகள், பாடல்கள் என எழுதி உள்ளார். இவர் வானொலியில் எழுதிய பாடல்களுக்கு பிறைசூடன் என்றே பெயரிட்டார். பிற்காலத்தில் அதுவே நிலைத்து விட்டது.

முரளி நடித்து மாபெரும் வெற்றியைத் தந்த படம் இதயம். இப்படத்தில் இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே…இதயமே….இதயமே …. என நம் நெஞ்சை உருக்கிய பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இப்போது அவரை நினைத்து இந்தப் பாடலைப் பாடவேண்டியுள்ளது.

கவிஞர் பிறைசூடன் கேப்டன் பிரபாகரன் என்ற விஜயகாந்தின் 100வது நாள் வெற்றிப்படத்தில் மறக்கமுடியாத பாடலான ஆட்டமா…தேரோட்டமா பாடலை எழுதி செம ஹிட் கொடுத்தார்.

அதே போல், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் சோலைப்பசுங்கிளியே…எனும் சோகமயமான பாடலை எழுதி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். இந்தப் பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது அவருக்கு கிடைத்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா என்ற டூயட் பாடலை எழுதி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பிரசாந்தின் ஸ்டார் படத்தில் ரசிகா, ரசிகா…ரசிக…ரசிக…என் ரசிகா பாடலை எழுதியவரும் இவர் தான். இந்தப்பாடலைக் கேட்ட உடனேயே ஒன்ஸ்மோர் கேட்கத் தூண்டும்.
என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, என்ன பெத்த ராசா, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், கேளடி கண்மணி, அமரன், பணக்காரன் ஆகிய படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.

1984ல் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்களை எழுத ஆரம்பித்தார். இவர் பாடலாசிரியராக அறிமுகமான படம் சிறை. இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இவர் 2017ல் ஜெயிக்கிற குதிரை என்ற படத்திற்குத்தான் கடைசியாக பாடல்களை எழுதினார். இவர் பக்திப்பாடல்களை எழுதுவதில் தான் அதிக அக்கறையுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைச்செல்வம், கபிலர், சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் கவிஞர் பிறைசூடன்.

இவரது மறைவு திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இவரது இல்லத்தில் காலமானார். இவரைப் பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் – உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர். திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top