கடவுள்களை கண்முன் நிறுத்தியவர் இவர் தான்..!
300க்கும் மேற்பட்ட படங்கள்... 9தெலுங்குப்படங்கள்.... 2இந்திப்படங்கள்...
நடிப்புச்சக்கரவர்த்தி, நடிகர் திலகம், செவாலியே, சிம்மக்குரலோன் இந்தப்பட்டங்களுக்குச் சொந்தக்காரர் யார் என்று கேட்டால் சட்டென்று சொல்லிவிடலாம் சிவாஜிகணேசன் என்று. வீரபாண்டிய கட்டபொம்மனையோ, வ.உசி.யையோ, பாரதியையோ, பகத்சிங்கையோ, வாஞ்சிநாதனையோ, திருப்பூர் குமரனையோ, கர்ணனையோ, அரிச்சந்திரனையோ, அப்பர் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்களையோ நாம் நேரில் பார்த்ததில்லை.
ஆனால், நேரில் பார்த்தது போன்ற ஒரு கம்பீரத்தை உண்டாக்கியவர் சிவாஜி தான். நடிப்பு வேறு. சிவாஜி வேறு என பிரித்துப் பார்க் முடியாது. இரண்டுமே ஒன்று தான்.
அந்த மாபெரும் கலைஞனுக்கு இன்று 93வது பிறந்தநாள். தமிழ்சினிமாவுக்கு இன்றளவும் பெயரை வாங்கித்தருவது இவரது படங்கள் தான். அவர் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களைப் பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் தம்பதியருக்கு 1.10.1928ல் பிறந்தவர் சிவாஜி. இயற்பெயர் கணேசமூர்த்தி. சிறுவயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக்கம்பெனியில் தான் நடித்து வந்தார். ஆரம்பத்தில் பெண் வேடம் போட்டும், சீதையாகவும், பரதனாகவும், இந்திரஜித்தாகவும் சூர்ப்பனகையாகவும் நடித்தார்.
அறிஞர் அண்ணாவின் இந்து கண்ட சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் இவர் வீர சிவாஜியாக நடித்தார். இதை வெகுவாகப் பாராட்டினார் ஈ.வெ.ரா. பெரியார். அப்போதுதான் அவர் இந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்த பாத்திரத்தின் பெயரையே இவருக்கு வைத்தார். அனறு முதல் சிவாஜி கணேசன் என்ற பெயர் நிலைத்தது.
1952ல் கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படம் பராசக்தி. இதுதான் சிவாஜியின் முதல் படம். ஆரம்பமே அமர்க்களமாக சிவாஜிக்கு பெயர் வாங்கித் தந்தது.
இவர் இந்த படத்தில் பேசும் முதல் வசனம் சக்சஸ். அதனால் தானோ என்னவோ படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி சக்சஸ் ஆனது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கோர்ட் சீனில் சிவாஜி பேசும் நீண்ட வசனம் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. சிவாஜிக்கு இது முதல் படமா என்றால் நம்பவே முடியவில்லை. அந்த அளவு அற்புதமான நடிப்பு.
அதேபோல் 1954ல் வெளியான அந்த நாள் படம். இதில் சிவாஜி வில்லன் ரோலில் வெகு யதார்த்தமாக நடித்து இருப்பார். ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது. கடவுள்கள், சுதந்திரப்போராட்ட தலைவர்கள் ஆகியவர்களின் கதாபாத்திரத்தில் உயிரோட்டமாக நடித்து அவர்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் சிவாஜிகணேசன்.
பானுமதி, பண்டரிபாய், வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, வாணிஸ்ரீ, ஜெயலலிதா ஆகியோர் இவருக்கு ஜோடியாக நடித்தவர்கள். கிருஷ்ணன் - பஞ்சு, டி.ஆர்.சுந்தரம், எல்.வி.பிரசாத், ஏ.பி.நாகராஜன், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், கே.சங்கர், ஸ்ரீதர், திருலோசகசந்தர், பி.மாதவன், கே.விஜயன் ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார்.
பத்மபூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி, பிலிம்பேர், கவுரவ டாக்டர் பட்டம், பிற மாநில விருதுகள், செவாலியோ (பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது) என சிவாஜிக்கு பட்டங்கள் வந்து குவிந்தன. ஆனாலும் தேசிய விருது இதுவரை கிடைக்கவில்லை என்பது ஆதங்கமே.
எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதுவாகவே மாறி விடுவார் சிவாஜி.
எம்ஜிஆருடன் கூண்டுக்கிளி, ரஜினியுடன் படிக்காதவன், விடுதலை, நான் வாழவைப்பேன், கமலுடன் தேவர் மகன், சத்யராஜூடன் ஜல்லிக்கட்டு, பிரபுவுடன் திருப்பம், வெள்ளை ரோஜா, சாதனை விஜயகாந்துடன் வீரபாண்டியன் ஆகிய படங்கள் சிவாஜியை மக்கள் மத்தியில் மாபெரும் கலைஞன் என்பதை பறைசாற்றின.