Connect with us

latest news

திரையரங்கைக் கோவிலாக மாற்றிய அம்மன் படங்கள்

அம்மன் படங்கள் ரிலீஸ் ஆனாலே திரையரங்குகள் கோவிலாக மாறிவிடுகின்றன. அம்மன் படங்களில் வரும் சாமி சிலையைத் திரையரங்கிற்கு வெளியே உள்ள வளாகத்தில் வைத்து சிறப்பு தரிசனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதே போல் கோவிலில் ஒலிக்கும் வகையில் பக்திப்பாடல்கள் படத்தில் ஒலிக்கும். அதை பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் பார்க்க திருவிழா கூட்டம் போல கூடி விடுவர்.

வெள்ளிக்கிழமை என்றாலே அம்மன் படங்கள் தான் நம் நினைவுக்கு வரும். புரட்டாசி மாதம் முழுவதும் நம் நினைவுக்கு வருவது தசரா தான். அதிலும் தென்னிந்தியாவிலேயே பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா எது என்றால் அது தசரா தான்.

வடக்கே மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே அதிகப்படியாக மக்கள் திரளாக வந்து அம்மன் அருளைப் பெற்றுச் செல்லும் இடம் தூத்துக்குடி மாவட்டம் தான். இங்குள்ள குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் 41 நாள்கள் விரதம் இருந்து பயபக்தியுடன் வேடம் அணிந்து ஊர்வலம் வருவர்.

கிட்டத்தட்ட 1 மாத காலம் அந்த ஊர் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எல்லா ஊர்களுமே தசராவிற்காக பக்தர்கள் ஆர்வமுடன் காப்பு கட்டி விரதமிருந்து அம்மன் அருளைப் பெற்றுச் செல்வார்கள். கடந்த வருடம் கொரானோ என்ற கொடிய நோய்த்தொற்றால் பலரும் கோவில் செல்ல முடியாமல் தவித்தனர். இந்த வருடம் கொஞ்சம் தொற்று குறைந்து உள்ளதால் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் காப்பு கட்ட ஆரம்பித்து விட்டனர். இன்று குலசை தசராவையொட்டி முத்தாரம்மன் கோவிலில் கொடி ஏறியுள்ளது.

தற்போது எங்கு பார்த்தாலும் காலை, மாலை வேளைகளில் குலசை முத்தாரம்மன் பாடல்கள் தான் ஒலிக்கின்றன. ஊர்தோறும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து செட் போட்டு இரவும் பகலும் அதிலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு, அங்கேயே சாமியை வைத்து கும்பிட்டு விரதத்தை அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழ்சினிமாவை எடுத்துக் கொண்டால் அம்மன் புகழ் பாடும் படங்கள் ஏராளமாக வந்துள்ளன. அவற்றில் சில படங்களை இங்கு பார்க்கலாம்.

அம்மன்

1995ல் வெளியான பக்தி திரைப்படம் அம்மன். அப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக அம்மனைக் காண குவிந்தனர். கேடி ராமகிருஷ்ணா இயக்கிய இப்படம் அம்மனின் பக்தி படம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அற்புதமாக அமைந்துள்ளது.

தண்ணீருக்கு மேலே கைகள் வருவது நம்மை ஆச்சரியப்பட வைக்கும். படத்தில் அதிரடி சாகசங்களும் உண்டு. கிளைமாக்ஸில் அம்மன் சூரனை ஆவேசமான வதம் செய்யும் காட்சிகள் நம்மை இருக்கையின் விளிம்புக்கு கொண்டு செல்லும். படத்தில் சௌந்தர்யா, ரம்யாகிருஷ்ணன், ராமிரெட்டி, கல்லு சிதம்பரம், வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் அம்மனாகவும், ராமி ரெட்டி பல உரு கொண்டு வரும் அரக்கனாகவும் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்தப் படம் பல்வேறு தரப்பினர்களையும் திரையரங்கிற்கு கவர்ந்து வந்தது. சௌந்தர்யா அம்மனின் பக்தையாக நடித்து இருப்பார். இந்தப்படத்தின் பட்ஜெட் 2 கோடி ரூபாய். கிராபிக்ஸ்க்கு மட்டும் 80 லட்சங்கள் செலவாகி உள்ளது.

குட்டி அம்மனாக வந்த குழந்தை நட்சத்திரம் பவானி தாய்க்குலங்களைப் பெரிதும் கவர்ந்தாள். அந்தக் குழந்தையின் பெயர் சுனையானா. தற்போது அவள் வளர்ந்து அவருக்கு திருமணம் ஆகி விட்டது.

மூக்குத்தி அம்மன்

2020ல் வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். என்.ஜே.சரவணன், ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதையை எழுதியது மட்டுமின்றி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார். இந்தப்படம் கொரானோ தொற்று காரணமாக 2020ல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஸ்மிருதி வெங்கட், ஊர்வசி, அஜய் கோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாளையத்து அம்மன்

2000ல் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. இராம நாராயணன் இயக்கிய இப்படத்தில் பாளையத்து அம்மனாக மீனா நடித்து இருந்தார். ராம்கி, திவ்யா உன்னி, சரண் ராஜ், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீ தேனாண்டாள் மூவீஸ் தயாரிப்பில் இப்படம் வெளியானது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்த படம். வேப்பிலை வேப்பிலை என்ற புகழ் பெற்ற அம்மன் பாடல் இந்;தப்படத்தில் தான் வருகிறது.

ஆடி வந்தேன், பால் நிலா, பாளையத்து அம்மா நீ பாச விளக்கு ஆகிய புகழ் பெற்ற பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

தாலிகாத்த காளியம்மன்

2001ல் ஆர்.சோமசுந்தர் இயக்கிய இப்படத்தை பி.கண்ணப்பன் யாதவ் தயாரித்தார். பிரபு, கௌசல்யா, சங்கவி, பாண்டியராஜன், மணிவண்ணன், பானுப்பிரியா, மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, மன்சூர் அலிகான், ராஜன் பி.தேவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இசை அமைத்தவர் சிற்பி. இப்படத்தில் தாலி காத்த காளியம்மனாக சிறப்புத் தோற்றத்தில் பானுப்பிரியா நடித்துள்ளார்.

ஸ்ரீபண்ணாரி அம்மன்

2002ல் பாரதி கண்ணன் இயக்கத்தில் வெளியான படம் ஸ்ரீ பண்ணாரி அம்மன். இப்படத்தில் கரண், விஜயசாந்தி, குஷ்பூ, வடிவேலு, நளினி, சுகன்யா உள்பட பலர் நடித்துள்ளனர். வெற்றி நடை, நம்பினோரை, தாலாட்டு கேட்டதில்லை, ரூபமாய், கலக்குது கரகாட்டம், கல்லானாலும் கணவன் தான், வந்திடு வந்திடு ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் டி.ராஜேந்தர். இப்படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகின. படத்தை ரசிகர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். இப்படத்தில் பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி நடித்து அசத்தியுள்ளார்.

 

 

google news
Continue Reading

More in latest news

To Top