Connect with us

Cinema History

வேற்றுமொழியில் இருந்து வந்த முன்னணி நடிகைகளின் மத்தியில் காவியமா நெஞ்சில் ஓவியமா என திணறடித்த நடிகை…!!!

தெளிவான தமிழ், கணீர் குரல். கோபம், நகைச்சுவையை கலந்து வெளிப்படுத்தும் சூப்பர் நடிப்பு. முன்னணி நாயகர்களின் கதாநாயகி, பின்னர் வில்லி, குணச்சித்திரம் என பொளந்து கட்டினார். நடிப்பு என வந்துவிட்டால் இவர் ஒரு ராட்சசி.

எம்.என்.ராஜம் தான் இந்தப் புகழுக்கெல்லாம் சொந்தக்காரர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழிப்படங்களிலும் நடித்து அசத்தியவர். தமிழ்த்திரையுலகிற்கு இவர் ஒரு விடிவெள்ளி.

இவர் 1940ல் மதுரை மாநகரில் நரசிம்ம ஆச்சாரிக்கு மகளாகப் பிறந்தார். அக்காலத்தில் வறுமை எப்போதும் சூழ்கையில் திறமை உள்ள பலரும் நாடக உலகிற்கு சென்று விடுவர். பெற்றோரே தாங்கள் சேர்ந்துள்ள நாடகக்குழுவில் இணைத்து விடுவர்.

எஸ்.வி.சுப்பையா, கே.ஆர்.ராமசாமி, வி.கே.ராமசாமி, எஸ்எஸ்.ராஜேந்திரன் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த நாடக உலகில் சிறந்து விளங்கக் காரணமான நாடக உலகின் தந்தைகளில் ஒருவரான யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக்குழு தான் மதுரை ஸ்ரீமங்களகான சபா. இங்கிருந்து வந்தவர் தான் எம்.என்.ராஜம். சிறுவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பாய்ஸ் கம்பெனியின் இந்த நாடகக்குழுவில் தான் சிவாஜிகணேசனும் பெண் வேடம் ஏற்று நடித்தார்.

Rambaiyin kathal

மனோகரா நாடகததில் வசந்தசேனையாகவும், கிருஷ்ணலீலாவில் யசோதையாகவும் நடித்து அசத்தினார் எம்.என்.ராஜம். இவருக்கு நாடகக்கல்வியைக் கற்றுக் கொடுத்தவர் சிவாஜி தான். பொன்னுசாமிப்பிள்ளைக்கு வந்த நெருக்கடியால் அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதை அறிந்து என்எஸ்கே. அந்த நாடகக்குழுவை ஏற்று என்எஸ்கே. நாடக மன்றம் என்று பெயரிட்டு சிறப்பாக நடத்தினார்.

அந்த வகையில் இவர் என்எஸ்கே.பிக்சர்ஸ் நிறுவனத்தையும் நடத்தினார். 1949ல் அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில், சுப்பாராவ் இசையில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் நல்ல தம்பி என்ற படத்தைத் தயாரித்தார். என்எஸ்கிருஷ்ணன், சகஸ்ரநாமம், பானுமதி, டி.கே.மதுரம் என்ற வெற்றிக்கூட்டணியில் தயாரானது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் டி.ஏ.மதுரத்தின் தங்கையாக நடித்து தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார் எம்.என்.ராஜம்.

தொடர்ந்து பைத்தியக்காரன் படத்தில் எம்ஜிஆர், டி.ஏ.மதுரத்துடன் இணைந்து எம்.என்.ராஜம் நடித்தார். மங்கையர்க்கரசி, பெண்மனம், மாப்பிள்ளை, என் தங்கை, மனிதனும் மிருகமும் ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

1954ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவான ரத்தக்கண்ணீர் படம் எம்.என்.ராஜத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்போது அவரது வயது 14 தான். அதிலும் காந்தா என்ற தாசி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.

m.m.rajam

தொடர்ந்து 1955ல் ஜெமினிகணேசன், சாவித்ரியுடன் இணைந்து மஹேஸ்வரி படத்திலும், மங்கையர்க்கரசி படத்தில் சிவாஜியுடன் இணைந்தும் நடித்து சக்கை போடு போட்டார். மாடர்ன் தியேட்டர்சின் கதாநாயகி படத்தில் நடித்தார். பின்னர் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அசத்தினார்.

இந்தப்படத்தில் ஜிக்கியின் பாடலான சின்னஞ்சிறு சிட்டே சீனாக்கற்கண்டே என்ற பாடலில் ஆடிப்பாடி நடித்து அசத்தினார் எம்என்.ராஜம். டவுன்பஸ் படத்தில் அஞ்சலிதேவியுடன் நடித்தார். மகாதேவியில் இளவரசி மங்கம்மாவாக நடித்தார்.

திருடாதே, நாடோடி மன்னன், பாக்தாத் திருடன் ஆகிய படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தார். சந்திரபாபுவுடன் மர்மவீரன், கவலை இல்லாத மனிதன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடித்துள்ளார்.

பாசவலை, ரம்பையின் காதல், நல்ல இடத்து சம்மந்தம், நீலாவுக்கு நிறைஞ்ச மனசு, விடிவெள்ளி, நான் பெற்ற செல்வம், பெண்ணின் பெருமை, ரங்கோன் ராதா ஆகிய படங்களில் நடித்தார். மக்களைப் பெற்ற மகாராசி படத்தில் ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்ற பாடலில் நடித்து அசத்தினார். சந்திரபாபுவுடன் படத்தில் காத்தவராயன் படத்தில் அதி அற்புதமாக நடித்து இருந்தார். பதிபக்தி படத்தில் சிவாஜியுடன் இணைந்து கொக்கரக் கொக்கரக்கோ சேவலே பாடல் இன்றும் நம்மைத் தாளம் போட வைக்கும்.

M.N.Rajam, A.L.Ragavan

புதையல், நான் சொல்லும் ரகசியம், வடிவுக்கு வளைகாப்பு, சிவகாமியின் செல்வன் ஆகிய படங்கள் எம்.என்.ராஜம் நடிப்புக்கு உதாரணங்கள்.

1960ல் வெளியான பாவை விளக்கு படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்து அசத்தினார். இது அகிலனின் நாவலான பாவை விளக்கு கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தில் இடம்பெற்ற காவியமா நெஞ்சில் ஓவியமா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. தை பிறந்தால் வழி பிறக்கும், பெண்குலத்தின் பொன்விளக்கு, சிவகங்கைச்சீமை, தங்கப்பதுமை, கல்லும் கனியாகும் ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார்.

paavai vilakku

பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படத்தில் 8 பிள்ளைகளின் தாயாக நடித்து இருந்தார் எம்.என்.ராஜம். வந்தாளே மகாராசி, திசை மாறிய பறவைகள், காயத்ரி, நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி படங்களில் செமயாக நடித்தார்.

அக்காலத்தில் வேற்றுமொழியில் இருந்து தமிழுக்கு வந்து இறங்கி அசத்திய நடிகைகளின் மத்தியில் தமிழ் மண்ணில் இருந்து நடித்து அசத்திய ஒரே நடிகை தான் எம்.என்.ராஜம். பின்னணிப்பாடகர் ஏ.எல்.ராகவனை மணந்தார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top