Connect with us
antha 7 naatkal

Cinema History

‘அந்த 7 நாட்கள்’ வெளியாகி 40 வருடம் – மறக்க முடியாத தமிழ் சினிமா!..

அந்த 7 நாட்கள் படம் வந்து 40 வருடமாகி விட்டது.

இன்றைக்கும் அந்தப்படத்தோட திரைக்கதை மாதிரி வேறு இருக்கான்னு பார்த்தா இருக்கிற மாதிரி தெரியலை. இதை ஒட்டி வந்த கதைகள் தான் நிறம் மாறாத பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மௌனராகம், ராஜாராணி. காட்சி அமைப்புகள் வேறு வேறாக இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத நூலிழை ஒண்ணு இந்த எல்லாக்கதையையும் இணைக்கும். அது தான் நாயகி கதாபாத்திரம்.

அந்த 7 நாட்கள் வசந்தி கதாபாத்திரம் நம் இந்திய பெண்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் பாத்திரம். பாக்யராஜ் தான் நாயகனாக நடிக்க கதையை எழுதினாலும் அவரறியாமல் நாயகி வசந்தி பாத்திரம் மேலே வந்துவிடும்.

வசந்தி முதல் வசந்தி வரை.

வசந்தி பாத்திரத்தில் துவங்கும் படம் வசந்தி பாத்திரத்திலேயே முடியும். வசந்தி இறுகிய முகத்தோடு திருமணத்துக்கு தயாராவதில் தொடங்கும் படம் வசந்தி தாலியை கழட்ட முடியாமல் கதறுவதில் முடியும்.

antha 7

ஒரு நாயகி என்றால் மரத்தை சுற்றி பாடும் காலத்தில் ரசிகர் மனதை சுற்ற வைத்தவர் பாக்யராஜ். வசந்தி முதல் காட்சியில் பாக்யராஜ்-ஹாஜா ஷெரீப்பை பார்த்ததும் பிச்சைக்காரர் என நினைத்து சோறு கொண்டு வருவதும், அவர்கள் வீடு பார்க்க வந்தவர்கள் என்றதுமே உடனே சிரிப்பை அடக்க முடியாத குழந்தை மனமுடையவள்.

வசந்தி மீன் கழுவும் போது மாதவன்(பாக்யராஜ்) அய்யர் என்று சொல்லி உள்ளே போக சொல்லும் போது பச்சை மீனை நாக்கால் நக்கி ஒரு நக்கல் விடுவாள் பாருங்கள். வசந்தியோட செம நக்கல் இது தான். அதை விட முக்கியமாக பாக்யராஜ் வைத்த காட்சி அந்த குளியலறை காட்சி.

குளியறைக்காட்சிகள் என்றால் இயக்குனர் சிந்திப்பது நாயகியை பிறந்தமேனியாக்கி நாயகன் பார்ப்பதாக காட்சியை வைத்து ரசிகனை அந்த கற்பனைக்காட்சிக்குள் புகுத்துவது. பாக்யராஜ் இதிலும் வசந்தியை முக்கியத்துவப்படுத்தி இருப்பார். பொதுவாக ஆண்களுக்கு தான் பெண்ணை இப்படிப்பார்த்தால் ஷாக்கடித்தது போல் விர்ருன்னு இருக்கும்.

antha 7

இதிலும் வசந்தி பிறந்த மேனியாக மாதவனைப்பார்த்ததும் விர்ரென்று ஷாக்கடித்ததோடு ச்சீய் என்று தன்னைத்தானே அடித்துக்கொள்ளும் காட்சியிலும் வசந்தியின் இயல்பு அழகு. பிற்காலத்தில் டாக்டரின் மனைவியாகி தாலியை கழற்ற முடியாமல் மாதவன் அவர்கள் வாழ்க்கையிலிருந்து விலகிப்போனாலும் வசந்திக்கு மாதவனின் நியூட் மனதை விட்டு மறையுமா? அதுவும் 80 காலப்பெண்ணுக்கு.

மாதவன் மேல் பரிதாபம் தான் வசந்திக்கு ஏற்படுகிறது. அதனாலேயே பர்னால் வாங்க காசு கொடுப்பதும், இட்லியை பொட்டலம் கட்டி கொடுத்து விடுவதும். வசந்தி தன் இரக்கக்குணத்தோடு மட்டுமல்லாமல் ஹாஜாவை பூங்காவில் அழைத்து “ஏன்டா இப்படி கஷ்டப்படறாரு. பேசாமல் ஊருக்குப்போகச்சொல்லுடா” என்பதில் வசந்தியின் இரக்க குணம் எப்படிப்பட்ட அன்பாக வெளிப்படுகிறது.

பின் மெதுவாக தன் மனதில் மாதவனோடு தோன்றியது காதல் தான் என்பதில் வசந்தியின் தீர்க்கமான முடிவு அன்றைய 80 சூழ்நிலையில் காதலை ஜாடைமிடையாக சொல்லத்துணிவது தான். அதற்காக பாட்டெழுதி ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’என பாட்டெழுதி கொண்டு வந்த வசந்தி எப்படிப்பட்ட கவிதாயினி.

antha7

‘நம் இருவருக்கும் உள்ள நெருக்கம். இது யாருக்கு இங்கு கிடைக்கும்’ என்கிற கவிதை வரிகளில் வசந்தியின் எரிச்சல் அழகினை வெளிப்படுத்துகிறது. தான் மயங்கிய அதே குளியலறை யுக்தியை திரும்ப பிரயோகிக்க யோசித்த வசந்தி குளிக்கும் போது கடவுளை வேண்ட மாடி சுவற்றுக்கருகே வரும் மாதவனை கவர பாட்டு பாடி ஈர்க்க நினைக்கும் அந்த செயல் வசந்தியின் அழகைப்பார்த்தாவது விரும்ப மாட்டானா என்கிற நப்பாசையும் நிராசையாகும் கணம் வசந்தி அந்தக்காலப் பெண்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

ஏழு நாட்களுக்குப்பிறகு காதலனோடு இணையப்போகிறோம் என்கிற சந்தோஷம் இல்லையென்றாலும் வசந்தியின் மனம் தன் கையாலாகாதத்தனத்தால் எரிச்சலோடு தான் வாழ்கிறது. ஆனால் டாக்டரின் சிறு குழந்தை தன் வேலையை தானே செய்து பழகிக்கொள்ள அப்பா சொன்னதாக சொல்லும் போது வசந்திக்கு தான் அந்தக்குழந்தையின் மனிதத்தன்மையிடம் தோற்றுப்போனதாக உணர்வது பாக்யராஜின் திரைக்கதை சிறப்பு.

ஒரு குழந்தையின் மெச்சூரிட்டி கூட வசந்தி தன்னிடம் இல்லாதது கண்டு வெட்கிப்போகிறாள். முடிவாக வசந்திக்கு முன்பு தான் காதலன் நின்றாலும் வசந்தி டாக்டரின் மனைவியாக தான் மாறிப்போனதை உணர்கிறாள். அதனாலேயே உயிர் போனாலும் பரவாயில்லை என்று நினைத்த அவளுக்கு சந்தோஷமான காதலுக்காக சந்தோஷமான இயந்திர திருமண வாழ்க்கையை விட மனமில்லை.

antha8

மனமில்லை என்பதை விட தன் கழுத்தில் ஏறிய தாலியை இழக்க விரும்பவில்லை. ஹவுஸ் ஓனர் பெண் வசந்தியாக மாதவனுடன் ஓடிப்போன வசந்தி அல்ல இப்போது தான் என உணர்கிறாள். பொறுப்புடைய டாக்டரின் மனைவி தான். தாலியை கழட்டி எறிவது அநாகரீகம். அது பாரத தேசத்தின் பண்பாட்டுக்கு எதிரானது என உணரும் வசந்தி குழப்பத்தில் தெளிவான முடிவெடுக்கிறாள். வாழ்க்கை என்பது மற்றவருக்கு பயன்படுவது. அவளும் டாக்டரின் குழந்தைக்காக தன்னை கொடுக்கிறாள்.

இத்தனை எமோஷன்களை ஒரு படத்தில் ஒரு நாயகி பாத்திரத்தில் வைத்ததால்தான் பாக்யராஜ் அன்று பெருவெற்றி பெற்றார். இப்படிப்பட்ட பாக்யராஜ் தன்னைச்சுற்றி கதையை திரைக்கதையை எப்போது அமைக்கத்துவங்கினாரோ அப்போதே தோல்விகளை பெறத்துவங்கினார். திரைக்கதை மன்னனின் திரைக்கதைகளும் தோற்றன.

வசந்தி போன்ற எல்லா உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய பாத்திரங்கள் பின்பு வரவில்லை. இதை அழகாக நம்மிடம் கடத்திய அம்பிகாவை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.

படம் முடிந்து வீட்டுக்கு செல்லும் ரசிகனுக்கு ஏற்படும் பெரும் வலி என்பது மாதவன், டாக்டர், வசந்தி மூவருமே நிம்மதியாக வாழ முடியாது என்கிற உண்மை தான்….

முகநூலில் இருந்து செல்வன் அன்பு..

google news
Continue Reading

More in Cinema History

To Top