Connect with us

Cinema History

மறக்க முடியா வருடமாக அமைந்த 92ம் ஆண்டு தீபாவளி படங்கள்

தற்போதைய தீபாவளிக்கு முதலில் அண்ணாத்தே, வலிமை, மாநாடு, எனிமி படங்கள் வருவதாக இருந்தது. தற்போது அனைத்தும் அண்ணாத்தே படத்தோடும் மோதும் போட்டியில் இருந்து விலகி எனிமி மட்டும் வருமா வராதா என்ற நிலையில் உள்ளது.

ஆனால் ஒரு காலத்தில் தீபாவளிக்கு எப்படி பல தரப்பட்ட படங்கள் வெளியாகின தெரியுமா. ஒவ்வொரு நடிகருக்கும் பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் அந்த வகையில் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் நல்ல நல்ல படங்கள் வெளியாகின.

தீபாவளி அன்று காலையில் ஒரு படம் மதியம் ஒரு படம் இரவு படம் என வேறு வேறு படத்தை அடுத்தடுத்த தியேட்டர்களில் பார்த்துக்கொண்டே இருந்த ரசிகர்கள் அன்று இருந்தார்கள்.

அப்படியாக 1992ம் ஆண்டு அக்டோபர் 25 தீபாவளியான இதே நாளில் வெளியான பல படங்கள் சக்கை போடு போட்டன.

1992ம் வருட தீபாவளிக்கு ரஜினி நடித்த பாண்டியன், கமல் நடித்த தேவர் மகன், விஜயகாந்த் நடித்த காவியத்தலைவன், சத்யராஜ் நடித்த திருமதி பழனிச்சாமி, பிரபு நடித்த செந்தமிழ்பாட்டு, பாக்யராஜ் நடித்த ராசுக்குட்டி படங்கள் வெளிவந்தன.

அப்போது ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் எல்லாம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தனர். இதில் கார்த்திக் படத்தை தவிர்த்து அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகின.

ரஜினி நடிப்பில் வெளிவந்த பாண்டியன் படம் தான் பெரிய அளவில் போகவில்லை ரஜினியை வைத்து தொடர்ந்து பல படங்களை இயக்கிய எஸ்.பி முத்துராமனுக்கும் ரஜினிக்குமான கடைசிப்படம் இதுதான் ஆனால் பாடல்கள், ரஜினி படம் என்ற வகையில் சுமாராக பேசப்பட்டது.

கமல் நடித்த தேவர் மகனும் இதே நாளில் வந்த திரைப்படமாகும். நடிகர் திலகம் நடிக்க பிரபல மலையாள இயக்குனர் பரதன் இயக்கிய படம் இதுவாகும். இந்த படத்தின் சரித்திரவெற்றி அனைவரும் அறிந்ததுதான் .இன்று வரை பலராலும் மறக்க முடியாத இந்த திரைப்படம் கடந்த 1992ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது.

பிரபு நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வந்த செந்தமிழ் பாட்டு திரைப்படம் ஓரளவு சுமாராக ஓடிய படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ஹிட். காலையில் கேட்டது கோவில் மணி, கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா, வண்ண வண்ண சொல்லெடுத்து போன்ற பாடல்கள் இளையராஜா இசையில் ஹிட். பி. வாசு இப்படத்தை இயக்கி இருந்தார்.

ஆர் சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வந்த திருமதி பழனிச்சாமி திரைப்படமும் 1992ம் வருட தீபாவளிப்படமாகும். படம் பெரிய அளவில் வெற்றி இல்லை என்றாலும், ஆரம்பத்தில் வரும் கவுண்டமணி, சத்யராஜ், கோவை சரளா, சுகன்யா, ஆர் சுந்தர்ராஜன் இணைந்து செய்திருந்த காமெடிகள் சரவெடிகளாய் அனைவரின் வயிற்றையும் பதம் பார்த்தன என சொல்லலாம். குறிப்பாக  கல்யாண வீட்டில் சுகன்யா பின்னால் அலையும் சத்யராஜும் கூடவே வரும் கவுண்டமணி காமெடிகளும் ஏ 1 ரகமாக இருந்தது.

விஜயகாந்த் நடிப்பில் அந்தக்கால இயக்குனர் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கிய காவியத்தலைவன் படம் நல்ல குடும்பக்கதையாக சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருந்தாலும் அந்த நேரத்தில் வந்த தீபாவளி ஆக்சன் படங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது. இதில் இரண்டு பானுப்ரியாக்கள் நடித்திருந்தனர்.

பி.ஏ ஆர்ட் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தயாரித்திருந்த படம் ராசுக்குட்டி. இந்த படத்தை பாக்ய்ராஜ் இயக்கி நடித்திருந்தார். படிக்காத பணக்கார வீட்டு பிள்ளையாய் மைனர் வேடம் இதில் பாக்யராஜுக்கு.

கல்யாணக்குமார், மனோரமா, செம்புலி ஜெகன் மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்துக்கு இளையராஜா சிறப்பான இசையை கொடுத்தார் என்று சொல்லலாம்.

அந்த வருட தீபாவளிக்கு  வெளியாகி கமர்ஷியலாக நல்ல வெற்றியை பெற்ற படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும்.

ராஜிவ்காந்தி கொலையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை படம் கடைசி நேரத்தில் அந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை அதன் பின் 16 வருடங்களுக்கு பின் 2008ல் இப்படம் ரிலீஸ் ஆனது.

இப்படியாக 92ம் வருட தீபாவளி படங்கள் மக்கள் மனதை விட்டு என்றும் நீங்காதவை.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top