
இன்றைய நடிகர்களில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்றாலும், இளம் நடிகர்களில் உச்ச நடிகர் என்றால் இவர் தான்.. இவர் நடித்த படங்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்ப்பர். அவருடைய ஸ்பீடு…காமெடி கலந்த வசன உச்சரிப்பு, எக்ஸ்பிரஷன் என ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும், தாய்க்குலங்களுக்கும், முதியவர்களுக்கும் பிடித்தமானவையாக உள்ளன. இவர் படங்களைப் பார்த்தால் சோகமாய் இருப்பவர்கள் கூட புத்துணர்வு பெறுவர்.

சோம்பலாய் உள்ளவர்கள் கூட சுறுசுறுப்பானவர்களாய் மாறுவர். அவர் தான் விஜய்..! இளைய தளபதி என்ற பட்டத்திலிருந்து தளபதி அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். டான்ஸ், பாடல், சண்டைக்காட்சிகள், பஞ்ச் டயலாக் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அப்படியே நிறைவேற்றும் வகையில் இவரது படங்கள் அமைந்திருப்பதுதான் தனிச்சிறப்பு. தமிழ்சினிமாவின் நாடித்துடிப்பாக மாறிவிட்டார் விஜய். இவரை வைத்து படம் எடுத்தால் வெற்றி தான் என தயாரிப்பாளர்களும், இவரது படங்களை வெளியிட்டால் லாபம் தான் என திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நம்பிக்கை கொடுத்து புத்துயிர் கொடுத்தவர் தான் தளபதி விஜய். இவரது படங்கள் வெளியானால் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு தீபாவளி தான்…! அதைப்பார்ப்பதற்காகவே நிறைய கூட்டம் வரும்..
தளபதி விஜய்க்கு இன்று 46வது பிறந்த நாள். இவர் கடந்து வந்த பாதையைப் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
22.6.1974 ல் சென்னையில் பிறந்தார் விஜய். இவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர். இவரது மனைவி செயர் சங்கீதா சொர்ணலிங்கம். இவருக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
விஜய் நடிகர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பின்னணிப்பாடகர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார். தொடக்கத்தில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் நடித்து வந்தார். 10 படங்களுக்குப் பிறகு தமிழ்சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டார். இவரது படங்கள் 5 கண்டங்கள், 80 நாடுகளில் வெளியாகின்றன. இவருக்கு சீனா, ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி படம் வரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது 18வது வயதில் நாளைய தீர்ப்பு (1992) திரைப்படம் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம். ஆனால் 1996ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம் தான் இவருக்கு திருப்பு முனையைத் தந்தது.

64 படங்களில் நடித்துள்ள விஜய் தற்போது தளபதி 65 என்ற பெயரில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களைக் கொண்டாடச் செய்தது. பீஸ்ட் என்ற பெயரில் விஜயின் முரட்டுத் தோற்றம் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்;டர் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருப்பதை உறுதி செய்தது.
விஜய் இதுவரை 3 தமிழக அரசு விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
பின்னணிப்பாடகராக இவர் பாடிய பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை 32 பாடல்களைப் பாடியுள்ளார்.
விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் பூவே உனக்காக முதல் பல படங்கள் உள்ளன. 1996 முதல் 2003 வரை இவர் நடித்த படங்கள் வசந்த வாசல், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், மின்சாரக்கண்ணா, கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, தமிழன், யூத், பகவதி, வசீகரா படங்கள் முக்கியமானவை. இவற்றில் காதலுக்கு மரியாதை படத்திற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது கிடைத்தது.

விஜய்காந்துடன் செந்தூரப்பாண்டி (1993) படத்தில் நடித்து பெயர் பெற்ற விஜய்க்கு ரசிகர்கள் இளைய தளபதி என்ற பட்டத்தைக் கொடுத்தனர். இந்தப்படம் நல்ல வசூல் செய்தது. சிவாஜியுடன் ஒன்ஸ்மோர் படத்திலும், சூர்யாவுடன் நேருக்கு நேர் படத்திலும் இணைந்து நடித்தார். ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்தார். இவர் நடித்த ஆரம்ப கால படங்களான ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்துகளைப் படைத்தன.

2003 முதல் 2010 வரை விஜய்க்கு பரவலான வெற்றி படங்கள் தான். அதிரடி கலந்த ஆக்ஷன் படங்கள் இவரது வெற்றிக்கு அடித்தளமிட்டன. 2003ல் வெளியான திருமலை இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. 2004ல் கில்லி வெளியாகி வசூலில் சாதனை படைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிவகாசி, போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன் படங்கள் வெற்றியைத் தந்தன.

2011 முதல் 2016 வரை இவரது படங்கள் சர்வதேச அளவிற்குச் சென்றன. இவரது காவலன் படம் சீனாவில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. வேலாயுதம், ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படம் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டைப் பெற்றது. துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் படங்கள் தொடர் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றன.

இந்த கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகும் சூழலில் திரையரங்கிற்கு ஒரு உத்வேகமாய் மாஸ்டர் படம் வந்து புத்துயிர் கொடுத்தது என்றால் யாரும் மறுக்க முடியாது. விஜய் மீது ரசிகர்கள் அளவு கடந்த அன்பைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் பல இடங்களில் காணலாம். ஐடி ரெய்டின்போது விஜய்க்கு ஆதரவாக நெய்வேலியில் விஜய்க்காக திரண்ட கூட்டமே அதற்கு சாட்சி. விஜய் வெற்றியின் போது ஆர்ப்பரிக்காமலும், தோல்வியின் போது துவண்டு விடாமலும் இயல்பாகவே இருப்பார். அதுதான் அவரை தளபதி அந்தஸ்துக்கு கொண்டு சென்றது என்றால் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. a





