
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த திருத்த சட்டப்படி ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும்.
இந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜூலை 2ம் தேதி வரை பொதுமக்கள் இதுபற்றி கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த சட்டதிருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரதிற்கு எதிராகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது என திரைத்துறையை சார்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், நடிகர் சூர்யா, வெற்றிமாறன் என பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா ‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…’ என தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் ‘ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது கலையுலக கருத்து சுதந்திரத்திற்கு பெரிய அடியாக இருக்கும். நான் ஒன்றுபட்டு இதற்கு எதிராக போராட வேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி ‘எந்த நேரத்திலும் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வழிவகுக்கும் மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 (வரைவு), திரைப்பட தயாரிப்பிற்கு பாதுகாப்பின்மையும், வணிக வாய்ப்புகளையும் கடுமையாக பாதிக்கும். எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பா.ரஞ்சித், கவுதம் வாசுதேவ் மேனன்,விஷால், லிங்கு சாமி உள்ளிட்ட பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #CinematographAct2021 மற்றும் #FreedomOfExpression என்கிற ஹேஷ்டேக்குகளில் அவர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.





