
80களில் இவர் நடித்த படங்கள் ஏராளம். இவருக்கு என்று ஒரு தனி நடிப்பு கைகொடுத்தது. சாடை பேசுவதும், போட்டுக் கொடுப்பதுமான கேரக்டர்கள் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. தாய்க்குலங்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இவரது பெயர் தான் வடிவுக்கரசி 7.7.1962ல் பிறந்தார். இவர் ஒரு திரைப்பட மற்றும் டிவி தொடர் நடிகையாக உள்ளார். அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 10 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் கன்னிப் பருவத்திலே. இப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷ{டன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தொடக்கக் காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். இவர் முன்னாள் இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் உறவினர். அருணாச்சலம் திரைப்படத்தில் கதாநாயகனின் பாட்டியாக இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
முதல் மரியாதை படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். 1985ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கௌப்பியது. படத்தில் சிவாஜிக்கு இணையாக நடித்து கலக்கியிருப்பார் வடிவுக்கரசி. அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்…, பூங்காற்று திரும்புமா, வெட்டி வேரு வாசம், ஏ குருவி, ராசாவே உன்னை நம்பி, ஏ கிளியிருக்கு.., ஏறாத மலைமேல…, நான் தானே அந்தக்குயில் ஆகிய பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் படத்தை சிகரத்தைத் தொட வைத்து அழகு பார்த்தன.
ரசிகர்கள் படத்தை அடிக்கடி பார்த்து உச்சி முகர்ந்து கொண்டாடினர். இப்படி ஒரு படம் இனி தமிழ்சினிமாவில் வந்ததில்லை என இயக்குனர் இமயத்தை பாராட்டு மழையில் நனைத்தனர். படம் 2 தேசிய விருதுகளைப் பெற்றது. சிறந்த பாடலாசிரியருக்காக வைரமுத்துவுக்கு வெண் தாமரை விருதும், சிறந்த வட்டார திரைப்படமாக தேர்வு பெற்று இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு வெண்தாமரை விருதையும் பெற்றத் தந்தது. நம்ம குடும்பத்தக் காப்பாத்துற குலசாமி நீதாம்பா…என தன் மாமன் காலில் விழுந்து கேட்டதற்காக வடிவுக்கரசியை சிவாஜி கல்யாணம் செய்து கொள்கிறார். மாமாவின் கால் தொட்டு வேண்டிக் கொண்டதால் அன்று முதல் செருப்பு அணிவதையே தவிர்க்கிறார்.

சிவாஜியின் மனைவியாக வடிவுக்கரசி, கறைப்பல்லும் அந்தக் கறையின் வழியே தெறித்து வழிகிற பழமொழிகளும் படத்தை அண்ணாந்து பார்க்க வைத்தன. அவ்வளவு அற்புதமாக அந்த கேரக்டராகவே மாறியிருப்பார் வடிவுக்கரசி. தான் படத்தில் நடிக்கிறோம் என்று இம்மியளவும் தெரியாத அளவுக்கு அவரது கைதேர்ந்த நடிப்பாற்றலை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் பேசும் வார்த்தைக்கு வார்த்தை ஒரு பழமொழி கட்டாயம் இருக்கும். அந்த பழமொழிக்குள் இருக்கிற நச்சு வார்த்தைகளும் என அசாத்தியமான நடிப்பை அசால்டாகத் தந்து அசத்தியிருப்பார் வடிவுக்கரசி. இன்னும் உயரம் தொட வேண்டியவர் தான் அவர். அந்த ராட்சச நடிப்புக்குச் சொந்தக்காரர். இதிலும் பிரம்ம ராட்சஷி என்று சொன்னால் மிகையில்லை.
வடிவுக்கரசி நடித்த அடியார் இயக்கத்தில் வெளியான படம் போர்ட்டர் பொண்ணுசாமி. இதில் தேங்காய் சீனிவாசன், காந்திமதி மற்றும் பலர் நடித்துள்ளனர். 19.10.1979ல் வெளியானது. அதே ஆண்டில் வெளியானதுதான் கன்னிப்பருவத்திலே. ராஜேஷ், பாக்கியராஜ், வடிவுக்கரசி நடித்த இப்படம் 21.9.1979ல் பி.ஏ.பாலகுரு இயக்கத்தில் வெளியானது.

1997ல் வெளியான படம் அருணாச்சலம். அண்ணாமலை சினி கம்பைன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் இப்படம் வெளியானது. இதில் ரஜினிகாந்தின் பாட்டியாக கூன் முதுகுடன் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் வடிவுக்கரசி நடித்து அசத்தியிருப்பார். இவரது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றார். தோற்றத்தில் மட்டுமல்லாமல் குரலிலும் மிரட்டி வித்தியாசம் காட்டியிருப்பார். இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அல்லி அல்லி அனார்கலி, மாத்தாடு மாத்தாடு, அதான்டா இதான்டா.., நகுமோ…, சிங்கம் ஒன்று புறப்பட்டதே, தலை மகனே ஆகிய பாடல்கள் தேவாவின் இசையில் பின்னிப் பெடல் எடுத்தன.
வடிவுக்கரசியுடன் இணைந்து ரஜினிகாந்த், சிவாஜிகணேசன், அம்பிகா, மணிவண்ணன், ரகுவரன், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர்.
வடிவுக்கரசி நடித்த படங்கள்
சிகப்பு ரோஜாக்கள், வைதேகி காத்திருந்தாள், படிக்காதவன், முதல் மரியாதை, நீதியின் மறுபக்கம், கண்ணுக்கு மை எழுது, மிஸ்டர் பாரத், பருவ ராகம், வருஷம் 16, மகராசன், வீரா, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, அருணாச்சலம், நீ வருவாய் என, படையப்பா, சினேகிதியே, பார்த்தாலே பரவசம், தவசி, காசி, சொல்ல மறந்த கதை, சாமுராய், பாறை, எங்கள் அண்ணா, சிவாஜி, நீர்ப்பறவை, இறைவி, கண்ணே கலைமானே, ஜகமே தந்திரம்.
தற்போது லோகேஷ் குமார் இயக்கத்தில் என் 4, சுந்தர் இயக்கத்தில் கர்ஜனை மற்றும் மஸ்தான் இயக்கத்தில் தலபுள்ள ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்று பிறந்த நாள் காணும் வடிவுக்கரசிக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள்.





