
தமிழ் சினிமாவில் ‘சேது’ திரைப்படம் மூலம் இயக்குனராக மாறி தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இயக்குனர் பாலா. அடுத்து சூர்யாவை வைத்து ‘நந்தா’ படத்தை இயக்கினார். இப்படம் சூர்யாவை மற்றொரு கோணத்தில் காட்டியது. அதேபோல், விக்ரம், சூர்யா 2 பேரையும் வைத்து அவர் இயக்கிய பிதாமகன் திரைப்படத்திலும் அதிகம் பேசாத சூர்யாவை, வளவளவென பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரமாக காட்டி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தார் பாலா.

அப்படம் 2003ம் ஆண்டு வெளியானது. அதாவது,பிதாமகன் வெளியாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பின் சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். தற்போது இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் பாலாவுடன் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பின் விக்ரம் மகனை வைத்து அவர் இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் படம் முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாததால் வேறு இயக்குனரை வைத்து எடுக்கப்பட்டு வெளியானது. இது பாலாவுக்கு ஒரு கரும்புள்ளியாகவே அமைந்துவிட்டது.

எனவே, எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கும் பாலா கொஞ்சம் இறங்கி வந்து சூர்யாவிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளாராம். மேலும், இப்படத்தில் மற்றொரு ஹீரோவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான 23 ஜூலை அன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அன்றைக்குதான், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளது. எனவே, இந்த வருடம் பிறந்தநாள் ட்ரீட்டாக டபுள் டமாக்காவை ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





