ரஞ்சித் படமா? ஆர்யா படமா?.. ரசிகர்களை கவர்ந்ததா ‘சார்பட்டா பரம்பரை?’…..

Published on: July 22, 2021
---Advertisement---

9d0bed10b5c228fe9c668b3e332ab543-4

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், அனுபமா குமார், சந்தோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 

எமர்ஜென்சி கால மெட்ராசில் பாக்சிங் விளையாட்டை கௌரவமாக கருதும் சார்பட்டா, இடியப்ப பரம்பரைக்களுக்கு இடையேயான பகை தலைமுறை தலைமுறையாக தொடர்வதே கதைக்களம். குத்துச்சண்டையில் இடியப்ப பரம்பரையின் கை ஓங்கியிருக்க, இழந்த கௌரவத்தை மீட்க சார்பட்டா பரம்பரை களம் இறங்க, யாரும் எதிர்பாரத வண்ணம் பாக்ஸிங்கில் அனுபவே இல்லாத கபிலன்(ஆர்யா) சாம்பினாக வந்து சார்பட்டா பரம்பரை சார்பாக இறங்க பாக்ஸிங் ரிங்குக்குள் நடக்கும் அரசியலே படத்தின் திரைக்கதை.

9e60be8d8f9d2d45fa2d8429e31d4f37

முதல் பாதி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக நகர்கிறது.  அந்த கால பாக்சிங் நுணுக்கங்கள், ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு ஸ்டைலில் விளையாடுவது என படம் சுவாரஸ்யமாக செல்கிறது. படக்குழுவும் அதற்கு மெனக்கெட்டுள்ளது. அதிரடி பாக்சிங் சண்டை காட்சிகள் முதல் பாதி விறுவிறுவென செல்ல உதவுகிறது. அங்கங்கு சாதிய ஒடுக்குமுறையை உள்ளே புகுத்தியிருக்கிறார் ரஞ்சித்.

ஆனால், 2ம் பாதி நம்மை சோதித்து விடுகிறது. கதை எங்கெங்கோ சென்று இது பாக்சிங் விளையாட்டு தொடர்பான படமா இல்லை கபிலன் எங்கிற தனிமனிதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டும் படமா என நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதாவது பாக்சிங் ரிங்குக்கு வெளியே கதை மிகவும் மெதுவாக நகர்ந்து நம்மை அயர்ச்சி அடைய செய்கிறது. 

b2ca67d1d188027983c953bb469a327a-2-2

கபிலனா ஆர்யா உடலை ஏற்றி மெனக்கெட்டுள்ளார். அவரின் அர்ப்பணிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அதேபோல் கோபம், ஆக்ரோஷம், இயலாமை என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி நம்மை கட்டிப்போடுகிறார். ஆர்யாவை இப்படி பார்ப்பதே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், படத்தின் முக்கியமான கதாபாத்திரமான பாக்சிங் வாத்தியார் பசுபதியை 2ம் பாதியில் காணவே இல்லை. அது பெரிய குறை.

மற்றபடி பட்டர் இங்கிலீஸ் பேசி வரும் கதாபாத்திரமாக ஜான் விஜய்,  மாரியம்மாவாக வரும் துஷரா விஜயன் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்துள்ளனர். அதேபோல், டான்சிங் ரோஸாக வரும் ஷபீரின் உடல் மொழி ரசிகர்களை நிச்சயம் கவரும். அவருடன் ஆர்யா மோதும் சண்டை காட்சி ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமைந்துள்ளது. அந்த சண்டைக் காட்சிக்காகவே அன்பறிவு டீமுக்கு பெரிய கைதட்டல்.  

79ef57d62f7789226347ae30a0dde63e

பாக்சிங் ரிங்கை முரளியின் கேமரா அற்புதமாக சுற்றிவந்துள்ளது. பழைய மெட்ரஸை ராமலிங்கத்தின் கலை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. பாடல்கள் இல்லை என்றாலும் சண்டை காட்சிகளில் வரும் பின்னணி இசை மற்றும் படத்தின் இறுதி காட்சியில் வரும் அந்த ராப் பாடல் மூலம் படத்தில் நானும் இருக்கிறேன் என சந்தோஷ் நாராயணன் நிரூபித்துள்ளார்.

முதல் பாதிலேயே படம் முடிந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தி விடுவதுதான் திரைக்கதையின் பெரிய பலவீனம். அரசியல், சாதி பாகுபாடு, கள்ளச்சாராய தொழில், பழிவாங்கும் முயற்சி, மதுபழக்கத்திற்கு அடிமையாகும் ஆர்யா என இரண்டாம் பாதி ஒரு தனிப்படமாக பயணிக்கிறது. ஆர்யா ஏன் அப்படி மாறினார்? குழப்பமான கலையரசன் கதாபாத்திரம் என இது ரஞ்சித் திரைப்படம்தானா என நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது.

efa1ae56872458197af3fa1685b43498-2

அரசியல் ரீதியாக தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதை ரஞ்சித் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பதிவு செய்ய தவறிவிட்டது படத்தின் இலக்கை தீர்மானிக்க தவறிவிட்டது. பாக்சிங் காட்சிகளுக்கு மெனக்கெட்டது போல் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருந்தால் சார்பட்ட பரம்பரை எல்லோரையும் ஈர்த்திருக்கும்…

ஆனாலும், படத்தின் முதல் பாதி, ஆர்யாவின் மெனக்கடல், பழைய மெட்ராஸ், புதிய கதைகளம், விளையாட்டில் உள்ள அரசியல் ஆகிய காரணங்களுக்காக இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.  

சார்பட்டா பரம்பரைக்கு நாம் தரும் மதிப்பென் 3/5…
 

Leave a Comment