
மாஸ்டருக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாநாடு, கைதி, மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும், கலைஞானி கமலும் இணையவுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டெரர் லுக்கில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரின் தோற்றம் இருந்தது படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், அடுத்த வாரம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரியாகவும், பஹத் பாசில் விஞ்ஞானியாகவும், டெடர் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், படத்தின் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி என கூட்டணி இணைவதால் வியாபார மட்டத்திலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எனவே, இப்போதே படத்தின் வியாபாரம் பற்றி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேச துவங்கிவிட்டார்களாம். அதோடு, ஆச்சர்யப்படும் விதமாக விக்ரம் படத்தின் ஹிந்தி பட ரீமேக் உரிமை மட்டும் ரூ.35 கோடி வரை பேசப்பட்டு வருகிறதாம். கமலின் திரையுலக வரலாற்றில் இதுவரை அவர் நடித்த எந்த படத்தின் ஹிந்தி பட உரிமையும் இவ்வளவு கோடிக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தயாரிப்பாளர் கமல்ஹாசன் மிக மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.





