
தமிழ் சினிமாவில் சமூகவலைத்தளங்களில் அதிக பில்டப் கொடுக்கப்பட்ட படம் என்றால் அது அஜித் நடித்து வரும் வலிமை படம்தான். ஹெச்.வினொத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாதிரி’ பாடல் வரிகள் வீடியோ நேற்று இரவு வெளியானது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னி என்பவரும் இணைந்து பாடியுள்ளனர். ஒரு கோவில் திருவிழாவில் பாடுவது போல் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் நேற்று வெளியாவதாக 2 நாட்களாகவே டிவிட்டரில் பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா, போனிகபூர், அவரின் மகள் ஜான்வி கபூர் என அனைவரும் டிவிட்டரில் தொடர்ந்து இப்பாடல் பற்றி பதிவிட்டு வந்தனர். எனவே, வேதாளம் படத்தில் அஜித்துக்கு அமைந்த ‘ஆலுமா டோலுமா’ பாடல் போல இந்த பாடலும் துள்ளலாக இருக்கும் என அஜித் ரசிகர்களும் நெட்டிசன்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர். இசையும் நன்றாக இல்லை. விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரிகளும் நன்றாக இல்லை என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.இசை மட்டும்தான் வருகிறது. பாடல் எங்கே இருக்கிறது? என பலரும் கிண்டலடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா ஏமாற்றிவிட்டதாக மீம்ஸ் போட்டு பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.இந்த பாடல் வீடியோ யுடியூப்பில் வெளியாகி 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





