
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடிக்கிடந்த போது தயாரிப்பாளர்களின் எதிர்ப்பை மீறி தனது சூரரைப்போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் சூர்யா. இதனால் தியேட்டர் அதிபர்களின் கோபத்திற்கு ஆளானார். அதேபோல், அவரின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. எனவே, இனிமேல் சூர்யா, ஜோதிகா நடிக்கும் திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பில் உருவாகியுள்ள 4 திரைப்படங்கள் அமேசான் பிரைமில் வெளியாவதாக சூர்யா இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதில் முதல் திரைப்படம் ‘ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்’ செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது. இதில், ரம்யா பாண்டியன் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். அடுத்து, சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘உடன் பிறப்பே’. இது அண்ணன் தங்கை செண்டிமெண்ட் திரைப்படமாகும். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாவுள்ளது.

அடுத்து ‘ஜெய்பீம்’. இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். முதன் முறையாக இருளர் சமுதாயத்தினரின் பிரச்சனைகளுக்கு போராடும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.இப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

அடுத்து ‘ஓ மை டாக்’. இது சிறுவர்களுக்கான திரைப்படமாகும். இப்படத்தில் அருண்விஜயின் மகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். ஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்பை இப்படம் விவரிக்கிறது. இப்படம் டிசம்பர மாதம் வெளியாகவுள்ளது.

இப்படி தனது தயாரிப்பில் உருவான 4 திரைப்படங்கள் அடுத்தடுத்து அமேசான் பிரைமில் வெளியாவதாக சூர்யா அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு முடிந்தாலும், 3வது அலை வந்துவிட்டால் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பில்லை. எனவேதான், ஒரு தயாரிப்பாளராக சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளார். இது சரியான முடிவுதான் என பலரும் கூறினாலும், தியேட்டர் அதிபர்களுக்கு சூர்யாவின் முடிவு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவருக்கு கடும் எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.