Cinema History
மோகனுக்கு குரல் கொடுத்து படங்களை வெள்ளிவிழாவிற்கு வித்திட்ட டப்பிங் கலைஞர் இவரா?!
எஸ்.என்.சுரேந்தர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நம்ம மைக் மோகனுக்கு குரலை வாடகைக்கு விட்டவர் என்பது தான். அப்போதெல்லாம் அவரது படங்கள் எல்லாமே வெள்ளிவிழாவும், வெற்றிவிழாவுமாகத் தான் இருந்தன.
ரசிகர்கள் அவரது படங்களுக்கு விரும்பிச் செல்லக் காரணம் அவரது அருமையான குரலும் ஒன்று என்றால் மறுக்க முடியாது. பெரும்பாலானோர் அது மோகனின் ஒரிஜினல் வாய்ஸ் என்று தான் நினைத்து இருப்பார்கள். அந்த அளவு கனகச்சிதமாக பொருந்திய இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்.என்.சுரேந்தர். மேலும் இவர் பாடகரும் கூட.
இவர் பாடிய பாடல்கள் யாவும் ஹிட் ரகம் தான். மோகனுக்கு மட்டுமில்லாமல் பிரதாப் போத்தனுக்கும் இவர் வாய்ஸ் கொடுத்து இருக்கிறார். கொஞ்சும் விதத்தில் இவரது குரல் கேட்போருக்கு இனிமையாக இருக்கும். காதல் ஓவியம் படத்திற்காக நடிகர் கண்ணனுக்கும், மௌனம் கலைகிறது படத்திற்காக நடிகர் ஆனந்த்பாபுவிற்கும் பின்னணி குரல் கொடுத்தவரும் இவரே.
நான் பாடும் பாடல் படத்திற்காக தேவன் கோவில் தீபம், ஊமை விழிகள் படத்திற்காக மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று, கண்மணி நில்லு, காரணம் சொல்லு, என் ராசாவின் மனசிலே படத்திற்காக பாரிஜாத பூவே, தேவா படத்திற்காக சின்ன பய சின்ன பொண்ண ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.
எஸ்.என்.சுரேந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் நடிகர் விஜயின் தாய்மாமன். அது எப்படின்னா விஜயோட அம்மா ஷோபா சந்திரசேருக்கு இவர் சகோதரர். இவரது ஒரே பையன் ஹரி. இவரும் அன்னியன் படத்தில் இளம் விக்ரம் கேரக்டரில் நடித்துள்ளார்.
1999ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார். நாளைய தீர்ப்பு, பிரியமுடன், சென்னை – 600 028 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சென்னை – 600 028 படத்தில் ஜெய்யின் அப்பாவாக வருவார்.
மோகனுக்கும் இவருக்குமான உறவு எப்படிப்பட்டது என ஒரு பேட்டியில் இவர் கொடுத்த தகவல் சற்றே ஆச்சரியமாகத்தான் உள்ளது. என்ன சொல்கிறார் என பாருங்கள்.
கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை என இரு படங்களும் சில்வர் ஜூப்ளி போயிருக்கு. எனக்கு தெரிஞ்சு நடிகர் மோகனுக்கு நான் பேசி 15 படங்களுக்கு மேல் வெள்ளிவிழாவும், 20 படங்களுக்கு மேல் 100 நாட்களும் ஓடியுள்ளன. 30 படங்கள் 10 வாரங்களாக ஓடியுள்ளன. எதுவுமே தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் நஷ்டத்தைக் கொடுக்கவில்லை. இந்த குரல் வந்து லாபமான குரல்.
இன்னிக்கு வரை அவர் எனக்கு போன் கூட பண்ணல. எப்பவாவது பார்த்தாக்கூட அப்படி ஒண்ணும் ப்ரண்ட்லி எல்லாம் கிடையாது. என்னன்னு எனக்கு இன்னிக்கி வரைக்கும் தெரியல. என்னோட ராசி அப்படின்னு நினைக்கிறேன்.
ஒருவேளை நான் மக்களுக்குத் தெரியாமல் இருந்தால் தான் அவரோட வேல்யூ பெட்டரா இருக்கும்னு அவர் நினைச்சிருக்கலாம். எனக்கு இன்னொருத்தர் பேசறாரு அப்படிங்கறதை சொல்லிக்கிறதுக்கு வந்து ரொம்ப பெருந்தன்மை வேணும். அது அவருக்கிட்ட இல்லாமக் கூட இருந்துருக்கலாம். 74 படங்கள் அவருக்காக பேசினேன்.
டப்பிங் ஆர்டிஸ்டா எனக்கு மாநில வருது கிடைச்சிருக்கு. கலைஞர் அய்யா அவர்கள் திருக்கரங்களால். அதுக்கு முன்னாடி கலைமாமணி விருது வாங்கியிருக்கேன். டப்பிங் யூனியன் சார்பில குரல் செல்வம் விருது எனக்கு கிடைச்சது.
எனக்கு சவாலா இருந்த விஷயம் என்னன்னா புதுமைப்பெண் படத்தில பிரதாப் போத்தனுக்கு பேசுன கோர்ட் சீன். பொதுவாவே என் வாய்ஸ்ல படத்துல வர்ற எல்லா கோர்ட் சீனுமே சூப்பரா இருக்குன்னு சொல்வாங்க. விதி படத்துல கோர்ட் சீன்.
அந்நியன்ல நெடுமுடி வேணுக்கு பேசுன கோர்ட் சீன் எல்லாம் சொல்லலாம். பாடல்கள்ல பூ அப்படின்னு ஆரம்பிக்கிற பாடல்கள் நிறைய பாடியிருக்கேன். அந்நியன் படத்திற்கு நெடுமுடி வேணுவுக்காக நான் டப்பிங் பண்ணிருந்தேன். இதற்கு தான் மாநில விருது கிடைத்துள்ளது.