Cinema History
பல் பிடுங்கிய பாம்பு என நம்பி ஏமாந்த ரஜினிகாந்த்.. இயக்குனர் பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்…
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். கே. பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் நெகட்டிவ் ரோலில் வலம் வந்து மக்களை தனது தனித்துவமான ஸ்டைலால் தன்வசப்படுத்தினார். அதன் பின் தமிழின் டாப் கதாநாயகனாக திகழ்ந்த ரஜினிகாந்த், தன்னிகரில்லா சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார்.
ரஜினிகாந்திற்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டு என்ற விஷயம் பலரும் அறிந்ததே. தொடக்கத்தில் ராகவேந்திரா சுவாமிகள் மீது நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் காலப்போக்கில் இமயமலை பாபா மீது பக்தி கொண்டார். அதன் தாக்கத்தால் தான் “பாபா” திரைப்படத்தை கதை எழுதி தயாரித்தார் என்பது வேறு விஷயம்.
இதனிடையே ரஜினிகாந்த் திரைப்படங்களின் வெற்றிக்கு “பாம்பு” ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக சில கிசுகிசுக்கள் பரவி வந்தன. அதாவது ரஜினிகாந்த் ஒரு சென்ட்டிமென்ட்டுக்காக தனது திரைப்படங்களில் ஒரு காட்சியிலாவது பாம்பு இடம்பெறுமாறு பார்த்துகொண்டாராம்.
“தம்பிக்கு எந்த ஊரு?” திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் பாம்பு இடம்பெற்றிருக்கும். அதன் பின் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் பாம்பு ஒரு காட்சியிலாவது வந்திருக்கும். “அண்ணாமலை”, “படையப்பா”, “பாபா”, “சந்திரமுகி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களிலும் பாம்பு இடம்பெற்றிருக்கும்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு “அண்ணாமலை” திரைப்படத்தில் இடம்பெற்ற பாம்பு காமெடி குறித்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை அத்திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார். அதாவது “முதலில் அது பல் பிடுங்கிய பாம்பு என்று தான் நினைத்தோம். பாம்பு சிவன் கழுத்தில் இருப்பது போல ரஜினிகாந்த்தின் கழுத்தில் அதுவாகவே ஏறி நின்றது. நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. அந்த காட்சி மிகவும் சிறப்பாக வந்தது. ஆனால் அந்த காட்சியை படமாக்கி முடிந்த பின்பு தான் அந்த பாம்பிற்கு பல் பிடுங்கப்படவில்லை என தெரிய வந்தது” என்று அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை கூறினார். ரஜினிகாந்த்தின் சென்ட்டிமென்ட் அவருக்கே வினையாக முடிய பார்த்திருக்கிறது என தெரிய வருகிறது.