Connect with us

Cinema News

பொன்னியின் செல்வன் பார்த்து கமல் சொன்ன அந்த கரெக்‌ஷன் – சுவாரஸ்ய பின்னணி!

இயக்குநர் மணிரத்னம் தயாரித்து இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அமரர் கல்கி எழுதியிருந்த பொன்னியின் செல்வன் நாவல் ஏற்கனவே எம்.ஜி.ஆர், கமல் உள்ளிட்டவர்களால் படமாக்க முயற்சிக்கப்பட்டு, அது கனவாகவே போனது. அதேநேரம், இந்த நாவல் இரண்டு முறை நாடகமாக மேடை ஏற்றப்பட்டது என்கிற தகவல் தெரியுமா… இரண்டு முறை நாடகமாக அரங்கேற்றப்பட்ட பொன்னியின் செல்வன் நாடகத்தை எழுதியது, இயக்கியது யார் தெரியுமா… நாடகத்தைப் பார்த்துவிட்டு கமல் சொன்ன கரெக்‌ஷன் என்ன தெரியுமா?

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி 1951 முதல் 1954 வரை தொடர்கதையாக வந்தது பொன்னியின் செல்வன். இது, 1955-ல் நாவலாகப் பிரசுரமானது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றும் தமிழில் அதிகம் விற்பனையாகும் நாவல்கள் பட்டியலில் டாப் டென் பட்டியலில் பொன்னியின் செல்வன் நிச்சயம் இடம்பிடித்துவிடும். அந்த அளவுக்கு காலம் கடந்து நிற்கும் காலப்பொக்கிஷம் பொன்னியின் செல்வன். திரைக்கதை வடிவத்திலேயே இருக்கும் இந்த நாவலை படமாக்க பல்வேறு சூழ்நிலைகளில் தமிழ் சினிமாவில் முயற்சி நடந்திருக்கிறது. குறிப்பாக வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்து எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வெவ்வேறு காலகட்டங்களில் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படமாக்க முயற்சி செய்தார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி கைகூடாமலேயே போனது.

ஆனால், முதல்முறையாக இயக்குநர் மணிரத்னம் அதை நனவாக்கியிருக்கிறார். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய ஸ்டார் காஸ்டிங்கோடு பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கும் இதன் முதல் பாகம் வரும் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொன்னியின் செல்வன் நாவல் படமாவதற்கு முன்பே இரண்டு முறை மேடை நாடகமாக அரங்கேற்றிய இளங்கோ குமரவேலின் பங்களிப்பும் படத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.


பொன்னியின் செல்வன் நாவலை நாடகமாக இரண்டு முறை மேடையேத்தியிருக்கிறார்கள் இளங்கோ – பிரவீன் காம்போ. 1999-லேயே ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தின் ஓப்பன் கிரவுண்டில் மிகப்பெரிய செட் போடப்பட்டு பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேறியிருக்கிறது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலைத் திரைக்கதையாக நான்கு மணி நேரத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். இந்த நாடகத்தைப் பார்க்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவருமே நேரில் வந்து நாடகக் குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

குறிப்பாக, வந்தியத்தேவன் கேரக்டரை முழுமையாக உள்வாங்கிய நடிகர் கமல்ஹாசன் ஒரு சில காட்சிகளில் கரெக்‌ஷன் சொன்னது, நாடகக் குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாம். யானையின் கால்களை இப்படி செட் செய்து கொள்ளுங்கள், ஒரு காட்சியில் வீரனின் எண்ட்ரி என அவர் சொன்ன கரெக்‌ஷன்களைப் பார்த்து பிரமித்திருக்கிறார்கள். அதேபோல், நாடகத்தின் மீதுதான் வெளிச்சம் விழ வேண்டும்; தன் மீதல்ல என்பதைக் கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் உறுதியாக இருந்திருக்கிறார். இதனாலேயே, 1999 மற்றும் 2014 என இரண்டு முறை நாடகம் அரங்கேற்றப்பட்ட போதும், நாடகம் தொடங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு வந்த அவர், நாடகம் முடிய சில விநாடிகள் முன்பே அரங்கில் இருந்து வெளியேறிவிட்டாராம்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top