நடிகர் அஜித் காதல் மன்னன் ரிலீஸுக்குப் பிறகு கிட்டத்தட்ட 1998-ம் ஆண்டு கொடுத்த இண்டர்வியூ வைரலாகி வருகிறது… அந்த பேட்டியில் அவர் சொன்ன விஷயங்கள் என்னென்ன?
அஜித், 1990-ல் வெளியான என் வீடு என் கணவர் படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அமராவதி படம் மூலம் தனி ஹீரோவாக அறிமுகமானவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பயணிக்கும் அஜித், இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்றைய நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித்.

மிகப்பெரிய ரசிகர்களைக் கொண்டிருக்கும் அஜித், உச்சத்தில் இருக்கும்போது தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். பாசிட்டிவ் எனர்ஜிக்கு உதாரணமாகச் சொல்லப்படும் அஜித், பைக், கார்களின் காதலர். அவரது வீட்டில் மிகப்பெரிய கலெக்ஷனே இருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல், சென்னையில் இருக்கும் பிரபலமான இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் ட்ரோன் குழுவின் ஆலோசகராகவும் இருக்கிறார். அவரது துணிவு படம் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
பொதுவாக அஜித், மீடியாக்களிடம் இருந்து ஒதுங்கியே இருக்கும் பழக்கம் கொண்டவர். சமீபகாலமாகவே இந்தப் பழக்கத்தை அஜித் கடைபிடித்து வருகிறார். ஆரம்பகாலங்களில் மீடியாக்களுடனும் ஜர்னலிஸ்டுகளுடனும் நெருக்கமான உறவைக் கடைபிடித்தவர். அப்படி பிரபலமான டிவி சேனலுக்கு 1998 வாக்கில் அவர் கொடுத்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து அஜித் பகிர்ந்திருப்பார். படத்தின் வெற்றி தோல்வி குறித்த கேள்விக்கு அஜித் பதில் கூறுகையில், `ஒரு படம் ஹிட் ஆனா அதுக்குக் காரணம் டைரக்டர்னுதான் சொல்றீங்க…

அதேநேரம், தோல்வியடைந்தால் மட்டும் அதற்கு அஜித் மட்டும் எப்படி காரணம்? அதுவும் ஒரு இயக்குநரின் பொறுப்புதான். அதேபோல், கதையைக் கேட்டு ஓகே சொல்லும் தயாரிப்பாளரும் இதற்குப் பொறுப்பாளியே என்று சொல்லியிருப்பார். தன்னுடைய சினிமா கரியரின் தொடக்கம் குறித்து பேசிய அஜித், நான் ஆரம்பத்தில் மெக்கானிக்கல் இண்டர்னாக சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஆனால், அது எனது குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், அதிலிருந்து வெளிவந்து கார்மெண்ட் கம்பெனி ஒன்றில் வேலையில் சேர்ந்தேன். சினிமாவில் நான் நடிக்க வந்தது ஒரு விபத்து போன்றதுதான்.
எதிர்காலத்தில் ஒரு கார்மெண்ட் கம்பெனியை சொந்தமாக வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று சொல்லியிருப்பார். மேலும், என்னதான் நடந்தாலும் சினிமா துறையில் சக்ஸஸ் எனும் வெற்றிதான் பேசும் என்பதுதான் தான் கற்றுக்கொண்ட பாடம் என்றும் அஜித், அந்தப் பேட்டியில் பேசியிருப்பார். அதேபோல், தனக்குக் கிடைத்த ரோல்களில் காதல் மன்னன் ரோல் நடிக்க ரொம்பவே ஸ்கோப் கொடுத்த ரோல் என்று கூறிய அவர், உல்லாசம் குரு கேரக்டரும் தனது மனதுக்குப் பிடித்தமானதாக இருந்தது.
ஆனால் என்ன காரணத்தாலோ அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார். தனக்கு சவால் அளிக்கக் கூடிய கேரக்டர்கள் இதுவரை எதுவும் வரவில்லை என்றும் தன்னை ஒரு சாஃப்டான லவ்வர் பாயாகக் காட்டவே விரும்புவதாகவும் சொன்ன அவர், இயக்குநர்கள் தன்னை வைத்து ரிஸ்க் எடுக்கத் தயங்குவதாகவும் சொல்லியிருந்தார்.