Connect with us

Cinema News

அட்டர் ஃப்ளாப் ஆன கதை.. வெற்றிப்படமாக ஆக்கிய எம் ஜி ஆர்.. மாயமும் இல்ல மந்திரமும் இல்ல..

சினிமாவில் ஒரு திரைப்படம் தோல்வியை தழுவியது என்றால் அத்திரைப்படத்தில் என்னென்ன தவறு செய்திருக்கிறோம் என அத்திரைப்படத்தின் இயக்குனர் சரிபார்த்து தனது அடுத்த படத்தில் அதனை சரிசெய்துகொள்வார்.

ஒருவேளை அத்திரைப்படத்தின் தோல்விக்கு அந்த கதைதான் காரணம் என்றால், அதன் பிறகு அது போன்ற கதையை யோசிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் ஒரு தோல்வியடைந்த படத்தின் கதையை இரண்டாவது முறையாக முயற்சித்து வெற்றி கண்ட வரலாற்றை கேள்விப்பட்டது உண்டா? அப்படி ஒரு சம்பவத்தை தான் எம் ஜி ஆர் நிகழ்த்தியிருக்கிறார்.

அதாவது 1967 ஆம் ஆண்டு சின்னப்பதேவரின் கதை தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் “தெயவச் செயல்”. இத்திரைப்படத்தை எம் ஜி பாலு இயக்கியிருந்தார். மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

எனினும் மனம் தளராத சின்னப்பதேவர் “அத்திரைப்படத்தின் கதை நன்றாக இருக்கிறது, இதனை வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்துப்பார்க்கலாம்” என யோசித்தார். அதன் படிதான் சின்னப்பதேவர் எம் ஜி ஆரை அணுகினார். எம் ஜி ஆரும் இத்திரைப்படத்திற்கு ஓகே சொன்னார்.

சின்னப்ப தேவர்

இத்திரைப்படத்திற்கு “நல்ல நேரம்” என பெயர் வைக்கப்பட்டது. எம் ஜி ஆர் சிறுவனாக இருக்கும்போது அவரை ஒரு சிறுத்தை தாக்கவருகிறது. அப்போது ஒரு யானை அவரை காப்பாற்றுகிறது. அதன் பின் யானைகளோடு மிகுந்த பாசம் கொள்கிறார் எம் ஜி ஆர். ஒரு கட்டத்தில் அந்த யானை மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. இறுதியில் அந்த யானை தன்னை நிரபராதி என நிரூபித்ததா? என்பதே கதை.

“நல்ல நேரம்” திரைப்படத்தை சின்னப்பதேவரின் தம்பி எம் ஏ திருமுகம் இயக்கினார். அத்திரைப்படம் 1972 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இவ்வாறு ஒரு தோல்வியான கதையை மீண்டும் திரைப்படமாக்க சின்னப்பதேவர் யோசிக்க அதனை எம் ஜி ஆர் வெற்றிப்படமாகவும் ஆக்கியுள்ளார்.

“தெய்வச் செயல்” திரைப்படத்தை ராஜேஷ் கன்னாவை வைத்து எடுத்து ஹிந்தியிலும் சூப்பர் ஹிட் ஆக்கினார் சின்னப்பதேவர் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top