Cinema News
“அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட”… இப்படித்தான் இந்த காமெடி உருவாச்சு… கலகலப்பான பின்னணி
வைகைப்புயல் வடிவேலு காமெடிகளில் இன்று வரை அறியாத புதிராக இருப்பது “அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட” என்ற காமெடிதான். இந்த நகைச்சுவை காட்சி அர்ஜூன் நடித்த “வாத்தியார்” திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இதில் வடிவேலு ரோட்டில் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது சிங்கமுத்துவிடம் ஒருவர் வடிவேலுவை பார்த்து “இவர் சரிபட்டு வருவார்” என கூறுவார். அப்போது சிங்கமுத்து “இவன் இதுக்குலாம் சரிபட்டு வரமாட்டான்” என்பார். அதற்கு வடிவேலு “நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்” என்று கேட்பார். அதற்கு சிங்கமுத்து அவரை அடித்து துரத்திவிடுவார்.
அதன் பின் வடிவேலு ஊருக்கு கிளம்பும் முன் சிங்கமுத்துவிடம் “எதற்கு சரிப்பட்டு வரமாட்டேன் ன்னு சொல்லுங்க” என கேட்பார். அப்போது சிங்கமுத்து பதில் கூறமாட்டார். வடிவேலுவின் அப்பாவான மனோபாலாவும் அவரை அடித்து துரத்துவார். வடிவேலு தனது மனதுக்குள்ளேயே “எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன், சொல்லுங்கடா” என்பார். அத்திரைப்படத்தின் இறுதிவரை வடிவேலு “எதற்கு சரிப்பட்டு வரமாட்டார்” என்பதை கூறமாட்டார்கள். இந்த காமெடி காட்சி மிகவும் பிரபலமாகியது. ஆனால் பார்வையாளர்களுக்கு “எதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்” என்ற சந்தேகம் மட்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “வாத்தியார்” திரைப்படத்தின் இயக்குனர் ஏ வெங்கடேஷ், இந்த காமெடி காட்சி குறித்த சுவாரசிய பின்னணியை பகிர்ந்துள்ளார். அதில் “ அந்த காட்சியை படமாக்க தொடங்கியபோது ஸ்கிரிப்ட்டில் அவர் எதற்கு சரிவரமட்டார் என்ற காரணமும் இருந்தது. ஆனால் திடீரென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எந்த காரணமும் வேண்டாம், அதை அப்படியே விட்டுவிடுவோம் என முடிவு செய்தேன். இந்த காமெடியை எழுதிய இராசு. மதுரவனும் சரி என்று சொன்னார்.
ஆனால் வடிவேலு இதற்கு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. இது பார்வையாளர்களுக்கு புரியாமல் போய்விடும் என நினைத்தார். ஆனால் அவரை இதற்கு ஒருவழியாக ஒத்துக்கொள்ள வைத்தோம். இப்படித்தான் இந்த காமெடி காட்சி உருவானது. இன்று வரை அது பார்வையாளர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ்தான்” என கூறியிருந்தார்.
ஆனாலும் பாருங்கள்… இந்த பேட்டியில் கூட ஏ வெங்கடேஷ், அந்த படத்தில் வடிவேலு “எதற்கு சரிபட்டு வரமட்டார்” என்பதை சொல்லவே இல்லை..