”பாட்ஷா” திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் “எப்போது அரசியலுக்கு வருவார்?” என்ற எதிர்பார்ப்போடு இருந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் எப்போது என்பது குறித்தும். கட்சியின் பெயர் குறித்தும் எதுவும் கூறவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், தனக்கு இனி அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை என கூறிவிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் ரஜினி அரசியலுக்குள் வராததற்கான காரணமாக அவருக்கு தோன்றிய சில சம்பவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் பேசியது இதோ…
“நான் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தி ஒன்றை படித்தேன். அதை படித்துப் பார்த்தபோது, நான் படித்துப் பார்த்த மாதிரியே அந்த செய்தியை ரஜினிகாந்த்தும் படித்துப்பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் அரசியலில் வருவதற்கான எண்ணத்தை அவர் கைவிட்டுவிட்டாரோ என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது.
அந்த செய்தி என்ன என்பதை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அது ரஜினிகாந்த்தின் ‘அண்ணாமலை’ திரைப்படம் வெளிவந்திருந்த காலம். அந்த விழாவில் ரஜினிகாந்த்தும் கலந்துகொண்டார்.

அந்த காலத்தில் ரஜினிகாந்த்திற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே மனஸ்தாபங்கள் இருந்ததாக செய்திகள் பரவின. இந்த நிலையில் அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘எனக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. பெண்கள் இந்த உலகில் சாதிப்பதற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த தடைகளை எல்லாம் தாண்டி இப்போது சாதனை பெண்மணியாக ஜெயலலிதா திகழ்கிறார். கடவுள் ஒரு மனிதனின் நிம்மதியை காலி செய்திட வேண்டும் என நினைத்தால் அவனை அரசியல்வாதி ஆக்கிவிடுவார். நான் இப்போது வெறும் ஒரு நடிகராக நிம்மதியாக இருக்கிறேன்’ என அப்போது கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அன்றைக்கு பேசியதை மீண்டும் நினைத்துப் பார்த்ததின் காரணமாகத்தான் அவர் அரசியலுக்குள் வரவில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது” என சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் ஒரு முறை நடிகை ரோஜா “ரஜினிகாந்த் யாரையும் பகைத்துக்கொள்ளமாட்டார். ஆதலால் அவருக்கு அரசியல் ஒத்துவராது” என ஒரு முறை கூறியிருந்ததையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
