Cinema History
எம்.ஜி.ஆருக்காக பாலச்சந்தரை கைவிட்ட நாகேஷ்… நண்பர்களுக்குள்ளே வெடித்த வெடிகுண்டு…
இயக்குனர் பாலச்சந்தரும் நடிகர் நாகேஷும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வந்தவர்கள். பாலச்சந்தர் இயக்கிய “நீர்க்குமிழி”, “நாணல்”, “பாமா விஜயம்”, “எதிர் நீச்சல்” போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நாகேஷ் நடித்துள்ளார்.
இவ்வாறு மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நண்பர்களுக்கு மத்தியில் ஒரு நாள் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
1972 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ, மனோரமா, தேங்காய் சீனிவாசன் ஆகியோரின் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “வெள்ளி விழா”. இத்திரைப்படம் முதலில் உருவான போது தேங்காய் சீனிவாசன் கதாப்பாத்திரத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது நாகேஷ்தான்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் காலை 9 மணிக்கு வாஹினி ஸ்டூடியோவிற்குள் நுழைந்தார் இயக்குனர் பாலச்சந்தர். அன்று நாகேஷ் இடம்பெறவேண்டிய காட்சிகளை எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் 11 மணி ஆகியும் நாகேஷ் வரவில்லை. அப்போது நாகேஷை அழைக்கச் சென்றிருந்த புரொடக்சன் மேனேஜர் விறுவிறுவென ஸ்டூடியோவுக்குள் நுழைந்தார். அவரை பார்த்த பாலச்சந்தர் “நாகேஷ் ஏன் இன்னும் வரவில்லை?” என கேட்டார்.
அதற்கு அந்த புரொடக்சன் மேனேஜர் “இன்று நாகேஷ் வரமாட்டார். அவர் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்” என கூறினார். இதனை கேட்ட பாலச்சந்தருக்கு கோபம் தலைக்கேறியதாம்.
“என்னய்யா சொல்ற, இன்னைக்கு நமக்குத்தானே கால்ஷீட் கொடுத்தான் நாகேஷ். அப்பரம் ஏன் வரமாட்டானாம்?” என கத்தினார். அதற்கு புரொடக்சன் மேனேஜர் அளித்த பதில் பாலச்சந்தரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது காலையிலேயே புரொடக்சன் மேனேஜர் நாகேஷை அழைத்து வர அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஒருவர் நாகேஷை அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்.
புரொடக்சன் மேனேஜரை பார்த்த நாகேஷ், அவரிடம் “இது யார் தெரிகிறதா? எம்.ஜி.ஆர் படத்தின் இயக்குனர். என்னை எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பிற்காக அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். இப்போது சொல். நான் எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பிற்குப் போகவா? அல்லது பாலச்சந்தர் படப்பிடிப்பிற்குப் போகவா?” என கூறிவிட்டு அந்த எம்.ஜி.ஆர் பட இயக்குனரின் காரில் ஏறி சென்றுவிட்டாராம்.
இந்த விஷயத்தை கேட்ட பாலச்சந்தர் அதிர்ச்சிக்குள்ளானார். “நாகேஷா இப்படி செய்தான்?” என ஸ்தம்பித்துப்போனார். “எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நாகேஷ் முறையாக சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? எம்.ஜி.ஆர் பட இயக்குனர் தன்னை அழைத்துப்போக வந்திருக்கிறார், அதனால் அவருடன் போவதாக சொல்லியிருக்கிறான். அப்படி என்றால் தினமும் இவனை நான் வீட்டிற்கே சென்று படப்பிடிப்பிற்கு அழைத்து வரவேண்டுமா என்ன? அப்படி என்றால் இவ்வளவு கால நட்புக்கு என்ன அர்த்தம்?” என பல சிந்தனைகள் அவர் மனதில் ஓடியதாம்.
இதையும் படிங்க: “இவரை எல்லாம் ஏன் நடிக்க வைக்குறீங்க?”… சரத்குமாரை கண்டபடி திட்டிய சூப்பர் ஸ்டார் நடிகை…
இதனை தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து, தயாரிப்பாளரை அழைத்த பாலச்சந்தர் “நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது. உடனே தேங்காய் சீனிவாசனை பிடிங்கள். அவர் தான் இந்த படத்தில் நடிக்கப்போகிறார். இனி இந்த படத்தில் நாகேஷ் கிடையாது” என கூறிவிட்டர். பல காலமாக இருந்து வந்த நட்புக்குள் பெரிய விரிசல் விழுந்தது.
எனினும், 3 வருடங்களுக்குப் பிறகு பலரின் முயற்சியால் நாகேஷும் பாலச்சந்தரும் மீண்டும் இணைந்தனர். அதன் பின் 1975 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் நடித்தார் நாகேஷ்.