1958ல் வெளியான படம் பானை பிடித்தவள் பாக்கியசாலி. டி.எஸ்.துரைராஜ் இயக்கிய இந்த படத்தில் புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே என்ற அற்புதமான பாடல் இடம்பெற்றது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இன்று வரை இது தொடர்வது தான் விசேஷம்.
இந்தப்பாடலை எழுதியவர் டி.கே.சுந்தர வாத்தியார். திருச்சி லோகநாதன் பாடியுள்ளார். டி.எஸ்.துரைராஜ், சாவித்திரி, கே.பாலாஜி, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.வி.வெங்கட்ராமன், எஸ்.ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

அப்படி என்னதான் இந்தப்பாடலில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோமா…
பொறுப்புணர்ச்சி உள்ள அண்ணன் ஒருவன், புகுந்த வீடு செல்லும் தன் தங்கைக்கு சில புத்திமதிகளைச் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது. இது அந்த ஒரு தங்கைக்கு மட்டும் என்று சொல்லிவிட முடியாது. அனைத்துப் பெண்களுக்குமே பொதுவான பாடலாக அமைந்து விட்டது என்பது தான் தனிச்சிறப்பு.
அன்றைய காலகட்ட பெண்களின் வாழ்க்கை முறையைத் தான் இந்தப்பாடல் பிரதிபலிக்கிறது. இப்படியெல்லாம் வாழ்ந்த பெண்ணைத் தான் நல்ல பெண், குடும்பப் பெண் என்றெல்லாம் சொல்லி வந்தனர்.
கணவனோடு இப்படி அனுசரிக்க முடியாத பெண்கள் மனைவிக்கே உரிய கடமைகளைச் செய்யத் தவறிவிடுகின்றனர். இதனால் தான் குடும்பத்தில் சிக்கல், சண்டை, சச்சரவு, மாமியார் – மருமகள் சண்டை, மாமனார் – மருமகள் சண்டை என பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
தவறான வழியில் செல்லும் பெண்கள் இத்தகைய பிரச்சனைகளை அனுபவித்து அல்லல் படுகின்றனர். அதனால் தான் பெண்ணே நீ இந்தப் பாடலில் உள்ள கருத்துகளைக் கேட்டு சமத்தாக நட…உனக்கு எந்தவித பிரச்சனையும் வராது. உன்னை எல்லோருக்கும் பிடித்துவிடும் என்பதை வலியுறுத்துகிறது பாடல்.
ஒரு பெண் அரசன் வீட்டில் பிறந்த இளவரசியாக இருந்தாலும் அவளுக்கு ஆணவம் இருக்கக்கூடாது. அதே போல் அவள் புகுந்த வீட்டில் மாமனார், மாமியாரை மதிக்க வேண்டும். விடியற்காலையிலேயே எழுந்து குளித்து விட்டு வாசலை சாணம் கொண்டு தெளித்து கோலம் போட வேண்டும். பின்னர் அடுப்படி சென்று சமையல் வேலை செய்யத் தொடங்கி விட வேண்டும்.

கண்ணால் ஜாடை காட்டி சில ஆண்கள் தன் வசப்படுத்த முயல்வார்கள். அவர்களிடம் போய் நின்றுவிடக்கூடாது. அதேபோல் பார்க்காத சில விஷயங்களைப் பார்த்ததாகப் பொய் கூறவும் கூடாது. அண்ணன் நல்ல புத்திமதிகள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். மாறாக அலட்சியப்படுத்தக்கூடாது. தாய் தந்தையரின் நற்பெயரைக் காக்கும் வகையில் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும்.
அந்தக் காலத்தில் இறந்து போன கணவனின் உயிரையே மீட்டவளும் ஒரு பெண் தான். இறந்த தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டதும் சாவித்திரி என்ற பெண் தான்..! அரசனும் நடுங்கக்கூடிய வகையில் கற்புக்கரசியான கண்ணகி நீதி கேட்டு போராடியிருக்கிறாள். அவளும் ஒரு பெண் தான். துணையாக நான் இருக்க பெற்றோர் இல்லையே, எப்படி கல்யாணத்திற்கு சம்மதிப்பது என்று சஞ்சலப்படாதே.
நானே உன்னைத் தாரை வார்க்கிறேன். சீரும் கொடுக்கிறேன். தாயைப் போல் நான் இருந்து உன்னைக் காக்கிறேன். கட்டிய கணவனுடன் நீ பிரியாமல் இருந்து பூ போல மணம் வீசி மகிழ்வாயாக. அழகிய கூரைப்புடவை கட்டி, மஞ்சள் பூசி குங்குமப் பொட்டிட்டு, நகைகள் அணிந்து கொள். பிள்ளைகள் பெற்று, வீடுகட்டி, பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்து அவர்களின் மூலம் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்வாயாக.
நோய் நொடியில்லாமல் 100 வயது வாழ்ந்து மகிழ நம் சாமி உனக்கு துணையிருக்கும் தங்கையே என்று பாடலை முடிக்கிறார். எவ்வளவு ஆழமான கருத்தை ஐந்தே நிமிட பாடலில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். இவ்வளவு தான் வாழ்க்கை. இன்றைய பெண்கள் இதன்படி நடந்தால் வீட்டுக்கு மட்டுமல்ல. ஊருக்கும், நாட்டுக்கும் நல்லதுதான்..!
இந்தப்பாடல் இன்றும் கிராமங்களில் நடக்கும் திருமண வீடுகளில் தவறாமல் ஒலிபரப்பாவதை நாம் கண்கூடாகக் காணலாம். இதற்கு என்ன காரணம் என்று இப்போது தெரிகிறதா..?!
