Cinema History
பெரிய நடிகர்களின் படம் ஓடாதா?!..கரும்புள்ளியை மாற்றிய கருப்பு தங்கம் விஜயகாந்த்…
தமிழ் திரைப்பட துறையில் எப்படி பல செண்டிமெண்ட் உள்ளது. இந்த நேரத்தில் பட அறிவிப்பை வெளியிட வேண்டும், படப்பிடிப்பின் முதல் காட்சி வினாயகரை ஹீரோ கும்பிடுவது போல் எடுக்க வேண்டும், இந்த நாட்களில் படத்தை வெளியிடக்கூடாது, மீறி வெளியிட்டால் தோல்வி நிச்சயம், இந்த ஹீரோ ராசியில்லாதவர், இந்த நடிகை ராசியில்லாதவர் என பல செண்டிமெண்ட்கள் உண்டு. தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் இவற்றை விடாமல் கடைப்பிடிப்பார்கள்.
தற்போது இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். செண்டிமெண்ட் போலவே சில கரும்புள்ளிகளும் திரைத்துறையில் இருந்தது. அதில் முக்கியமானது பெரிய நடிகர்களின் 100வது திரைப்படம் வெற்றிப்படமாக அமையாது என்பது.
அவ்வளவு ஹிட் கொடுத்து திரையுலகில் மன்னனாக வலம் வந்த எம்.ஜி.ஆரின் 100வது திரைப்படம் ‘ஒளிவிளக்கு’ திரைப்படமே பெரிய வெற்றிப்படம் இல்லை. அதேபோல், சிவாஜியின் 100வது படமான ‘நவராத்திரி’, ரஜினியின் 100வது படமான ‘ராகவேந்திரா’, கமலின் 100வது படமான ‘ராஜபார்வை’ மற்றும் பிரபுவின் 100வது படமான ‘ராஜகுமாரன்’ ஆகிய படங்கள் எல்லாமே தோல்விப்படங்கள்தான்.
இந்த கரும்புள்ளியை மாற்றியது விஜயகாந்துதான். அவரின் 100வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் மாஸ் ஹிட். அப்போதே பல கோடிகளை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஆர்.கே.செல்வமணி இப்படத்தை இயக்கியிருந்தார். விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இப்படத்தை தயாரித்திருந்தார். இளையராஜா இசையில் 2 பாடல்களும் செம ஹிட். சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் ஆர்.கே.செல்வமணி. இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி அசத்தியிருப்பார் மன்சூர் அலிகான். இந்த திரைப்படம் சில திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடியது.
இப்படம் மூலம் பெரிய நடிகர்களின் 100வது படம் ஓடாது என்கிற கரும்புள்ளியை நீக்கினார் விஜயகாந்த்.