Cinema History
சோவுக்கும் காமராஜருக்கும் இவ்வளவு பெரிய மோதல் ஏற்பட்டதா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த சோ, தொடக்கத்தில் நாடகத்துறையில் புகழ்பெற்றவராக திகழ்ந்தார். சோ இயக்கிய “துக்ளக்” நாடகம் இப்போதும் மிகப் பிரபலமான நாடகமாக திகழ்கிறது. அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, நடிகராக இருந்தாலும் சரி, யாருக்கும் பயப்படாமல் மிகவும் துணிச்சலோடு விமர்சனம் செய்வதில் சோ வல்லவராய் திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என பலருடனும் பல சமயங்களில் முரண்பட்டிருக்கிறார் சோ. தான் மனதில் நினைத்ததை மிகத் தைரியமாக பேசக்கூடியவராக சோ திகழ்ந்தார்.
இந்த நிலையில் சோ, பெருந்தலைவர் காமராஜரிடமே ஒரு முறை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாராம். அச்சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
“சம்பவாமி யுகே யுகே” என்ற பெயரில் சோ ஒரு நாடகத்தை இயற்றினார். அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் மேல் பல ஊழல் புகார்கள் எழுந்திருந்தனவாம். அவ்வாறு அந்த ஊழலை விமர்சிக்கும் வகையில் அந்த நாடகம் அமைந்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த பக்தவத்சலத்தின் கீழ் இருந்த அரசு, அந்த நாடகத்தை தடை செய்தது.
சோ ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு வக்கீலும் கூட. ஆதலால் அந்த தடையை எதிர்த்து சோ நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கே அந்த நாடகத்தின் மீதான தடையை நீக்கக்கோரி மனு போட்டார். மேலும் அந்த வழக்கில் மிகவும் தெளிவாக தனது வாதங்களை எடுத்து வைத்தார் சோ.
அந்த வாதங்களை தொடர்ந்து சோ அந்த வழக்கில் வெற்றிபெற்று, தன் நாடகத்தின் மீதான தடையை நீக்கச்செய்தார். “சம்பவாமி யுகே யுகே” நாடகத்திற்கு இவ்வாறு அரசு தடை விதித்திருந்த செய்தியும், அந்த தடை நீங்கிய செய்தியும் அந்த நாடகத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. ஆதலால் அந்த நாடகத்தை எங்கு அரங்கேற்றினாலும் அங்கே கூட்டம் குவிந்தது.
அப்படி ஒரு முறை ஒரு நிறுவனத்திற்காக “சம்பவாமி யுகே யுகே” நாடகத்தை சோ நடத்தியபோது அந்த நாடகத்திற்கு காமராஜர் தலைமைத்தாங்கினார். அங்கே அந்த மேடையில் அந்த நாடகத்தை குறித்து ஜெமினி கணேசன் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே அமர்ந்திருந்த காமராஜர், தனது அருகில் அமர்ந்திருந்த சோவைப் பார்த்த “ஜெமினி கணேசன் இந்த நாடகத்தை ரொம்ப புகழ்றாரே. அப்படி இந்த நாடகத்துல என்ன பண்ணிருக்கீங்க?” என கேட்டாராம். அதற்கு சோ “இந்த நாடகத்தை விட இந்த நாடகத்திற்கு வந்த பிரச்சனைகள்தான் ரொம்ப பெரிசு. இந்த அரசு இந்த நாடகத்திற்கு தடை விதித்ததினால்தான் இந்த நாடகத்திற்கு முக்கியத்துவம் கிடைத்தது” என கூறினார்.
“அப்படி அரசாங்கம் தடை விதிக்கும்படி நீங்க என்ன எழுதியிருந்தீங்க?” என கேட்டாராம் காமராஜர். அதற்கு சோ “அதை அரசாங்கத்துக்கிட்டத்தான் கேட்கனும்” என பதில் சொன்னார்.
“நீங்க எதாவது அதிக பிரசங்கித்தனமா எழுதியிருப்பீங்க. அதனாலத்தான் அரசு தடை பண்ணியிருக்கும்” என்றாராம் காமராஜர். உடனே சோ “அப்படி அதிகபிரசங்கித்தனமா இருக்குன்னா, ஏன் அந்த தடையை அரசாங்கம் நீக்கனும் “ என்று காமராஜரை பார்த்து கேட்டாராம் சோ.
இந்த கேள்வியால் காமராஜர் சற்று கோபப்பட்டாராம். “உங்களுக்கு நாடகம் போட லைசன்ஸ் கொடுத்தா, எப்படி வேணாலும் நாடகம் போடலாம்ன்னு அர்த்தமா? கார் ஓட்டுறதுக்கும்தான் அரசாங்கம் லைசன்ஸ் கொடுக்குது. அதுக்காக காரை ரோட்டுல ஓட்டாம ஆளுங்க மேல ஓட்டுவீங்களா?” என காமராஜர் கொஞ்சம் கோபத்தோடு கேட்டாராம்.
அதுவரை மிகவும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். காமராஜர் இவ்வாறு ஒரு கேள்வியை கேட்டதும், உடனே தனது இருக்கையில் இருந்து சோ எழுந்து நின்றார். “டிராபிக் ரூல்ஸ் படி நான் கார் ஓட்டுறதை யாராலும் தடுக்க முடியாது. அது மாதிரி அரசாங்கம் அனுமதி கொடுத்ததுக்கு பிறகு ஸ்கிரிப்டல இருக்குறதை நான் நாடகமா போடுறதை யாராலும் தடுக்கமுடியாது” என சத்தமாக கத்தினாராம்.
இவ்வாறு சோ பேசிய உடன் காமராஜர் அந்த அரங்கை விட்டு கோபத்துடன் வெளியேறிவிட்டார். ஜெமினி கணேசன் உட்பட அங்கிருந்த அனைவரும் சோவை பார்த்து காமராஜரிடம் மன்னிப்புக் கேட்கும்படி கூறினார்கள். ஆனால் சோவோ, காமராஜரிடம் மன்னிப்பு கேட்க துளி கூட மனம் இல்லாமல் இருந்தார்.
இதையும் படிங்க: “விஜய்யை என்னால மட்டுந்தான் விமர்சிக்க முடியும்”… பொதுவிழாவில் வாய்விட்டு சிக்கிய பிரபல இசையமைப்பாளர்…
அதன் பின் சோவின் தந்தையார் உட்பட பலரும், ஒரு பெருந்தலைவருடன் சோ இவ்வாறு நடந்துகொண்டதற்காக அவரை கடிந்துகொண்டார்கள். ஆனாலும் சோவின் மனம் மாறவில்லை. சோ அப்போது டிடிகே வாசு என்பவரிடம் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் சோவை காமராஜரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறிவந்ததால் சோ அலுவலகத்திற்கும் செல்லவில்லை. அதன் பின் ஒரு நாள் காமராஜர் டிடிகே வாசுவை அழைத்து “அந்த பையன் அன்னைக்கு கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாத்தான் பேசுனான். இருந்தாலும் நான் அதனை பெரிதா எடுத்துக்கொள்ளவில்லை” என கூறினாராம். அதன் பிறகுதான் சோ அலுவலகத்திற்கே போனாராம்.