Cinema History
கங்கை அமரனை இசையமைக்கச் சொன்னதால் கடுப்பில் முகத்தை திருப்பிக்கொண்ட இளையராஜா… சொந்த தம்பின்னு பாக்காம….
1983 ஆம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி, ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “முந்தானை முடிச்சி”. இத்திரைப்படத்தை பாக்யராஜ்ஜே இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.
இளையராஜாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “விளக்கு வச்ச நேரத்துல”, “கண்ண துறக்கனும் சாமி”, “அந்தி வரும் நேரம்” போன்ற பாடல்கள் காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடலாக அமைந்தது.
“முந்தானை முடிச்சு” திரைப்படம் உருவாவதற்கு முன்பு இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன்தான் இசையமைப்பதாக இருந்தது. இத்திரைப்படத்தின் கதையை ஏவிஎம் நிறுவனத்தாரிடம் பாக்யராஜ் கூறியபோது, அவர்கள் “இது ஒரு பக்காவான கிராமத்து கதை. இந்த கதைக்கு இளையராஜா இசையமைத்தால்தான் நன்றாக இருக்கும்” என கூறினார்கள்.
ஆனால் பாக்யராஜ்ஜோ “நான் கங்கை அமரனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். ஆதலால் இத்திரைப்படத்திற்கு கங்கை அமரனே இசையமைக்கட்டும்” என கூறினாராம். ஏவிஎம் நிறுவனத்தார் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பாக்யராஜ் ஒப்புக்கொள்ளவில்லை. இனி பாக்யராஜ்ஜிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைத்த ஏவிஎம் நிறுவனத்தார், கங்கை அமரனை தனது அலுவலகத்திற்கு அழைத்தனர்.
அப்போது ஏவிஎம் சரவணன், “பாக்யராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சி என்ற திரைப்படத்தை நாங்கள் தயாரிக்க இருக்கிறோம். அத்திரைப்படத்தின் கதைக்கு இளையராஜா இசையமைத்தால்தான் நன்றாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் பாக்யராஜ் உங்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் இளையராஜாவை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். நீங்கள்தான் பாக்யராஜ்ஜிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும்” என கூறினார்.
ஏவிஎம் சரவணனே இவ்வாறு நேரில் அழைத்து பேசியதால் கங்கை அமரனால் மறுத்துப் பேச இயலவில்லை. ஆதலால் பாக்யராஜ்ஜை சந்தித்த கங்கை அமரன் “இளையராஜா இசையமைத்தால்தான் நன்றாக இருக்கும் என எல்லாரும் விரும்புகிறார்கள். ஆதலால் நீங்கள் தயவு செய்து இளையராஜாவுடன் வேலை பாருங்கள்” என கூறி அவரை சம்மதிக்க வைத்தார்.
ஆனால் “முந்தானை முடிச்சு” திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆதலால் இளையராஜாவை நேரில் சந்திக்கச் சென்றார் பாக்யராஜ் .
“என் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னீர்களாமே? ஏன்?” என இளையராஜாவிடம் கேட்டார். அதற்கு இளையராஜா “ஆமாம். உன் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்னுதான் சொன்னேன். நீ மட்டும் என்ன முதலில் என்னையவா இசையமைக்க கூப்பிட்ட. கங்கை அமரனைதானே இசையமைக்க கூப்பிட்ட. இப்ப மட்டும் எதுக்கு நான்?” என கேட்டாராம்.
இளையராஜா பாக்யராஜ்ஜிடம் இப்படி கோபமாக பேசினாலும், அவர் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு இருந்ததாம். ஆதலால் எப்படியாவது இளையராஜாவை சம்மதிக்க வைத்துவிடலாம் என நினைத்து தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தாராம் பாக்யராஜ். அதன் பின் ஒரு வழியாக “முந்தானை முடிச்சு” திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார்.