Cinema History
டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது?? சிவாஜி படத்துக்கு எழுந்த விசித்திர சிக்கல்… சமயோஜிதமாக சமாளித்த தயாரிப்பாளர்…
1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பார்த்தால் பசி தீரும்”. இதில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இரு வேடங்களில் நடித்திருந்தார்.
“பார்த்தால் பசி தீரும்” திரைப்படத்திற்கு ஏ.சி.திருலோகச்சந்தர் கதாசிரியராக பணிபுரிந்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தை பிரபல இயக்குனரான பீம் சிங் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து Pre Production பணிகள் முடிவடைந்தபிற்கு இத்திரைப்படத்திற்கு ஒரு வினோத சிக்கல் வந்திருக்கிறது. அதாவது சாவித்திரி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி ஆகியோரின் பெயர்களில் யார் பெயரை டைட்டிலின் முதலில் போடுவது என்ற விவாதம் எழுந்ததாம்.
சாவித்திரி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி ஆகிய மூவரும் அக்காலகட்டத்தில் டாப் நடிகைகளாக திகழ்ந்து வந்தார்கள். ஆதலால் தனது பெயர்தான் முதலில் வரவேண்டும் என மூவருமே விரும்பினராம். இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என இயக்குனர் பீம் சிங்கிற்கு ஒரே குழப்பமாக இருந்ததாம்.
ஆதலால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடம் இந்த பிரச்சனையை எப்படியாவது சமாளிக்குமாறு கேட்டுக்கொண்டாராம் பீம் சிங். அதன்படி ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் ஒரு அருமையான யோசனையை கூறினாராம்.
அதாவது கதாநாயகர்கள் யாருடைய பெயரையும் போடவேண்டாம் எனவும், “உங்கள் அபிமான நட்சத்திரங்கள்” என்று ஒவ்வொருவரின் புகைப்படங்களை மட்டும் போட்டுவிடுமாறும் யோசனை கூறினாராம். மெய்யப்பச் செட்டியாரின் யோசனைப்படி யாருடைய பெயரையும் டைட்டிலில் போடாமல் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறுவது போல் டைட்டில் கார்டு போட்டாராம் பீம் சிங்.