Cinema History
எம்.ஜி.ஆரை பிடிக்காமல் படப்பிடிப்பில் பாடாய்படுத்திய இயக்குனர்.. பின்னாடி நடந்ததுதான் டிவிஸ்ட்!.
1950 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், மாதுரி தேவி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மந்திரிகுமாரி”. இத்திரைப்படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முதலில் எம்.ஜி.ஆரை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு எல்லீஸ் ஆர்.டங்கனுக்கு விருப்பமே இல்லையாம்.
எனினும் வேறு வழியில்லாமல் எம்.ஜி.ஆரை ஹீரோவாக நடிக்க வைத்தாராம் டங்கன். ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை போட்டு பாடாய் படுத்தினாராம் இயக்குனர். அதாவது ஒரு சண்டைக் காட்சியில் ஹீரோ சுடும் பாறை ஒன்றில் சாய்ந்து சண்டையிடுவது போல் ஒரு காட்சியை வைத்திருந்தாராம். அதற்காக அந்த காட்சியில் எம்.ஜி.ஆர் அந்த பாறையில் சாய்ந்து சண்டையிட வேண்டிய நிலை வந்தது.
அந்த காட்சியில் எம்.ஜி.ஆர் நடிப்பு திருப்தியாக இல்லை என்று மீண்டும் மீண்டும் அந்த காட்சியை படமாக்கினாராம் டங்கன். ஆதலால் சுடும் பாறையில் சாய்ந்து சாய்ந்து எம்.ஜி.ஆரின் முதுகெல்லாம் ஆங்காங்கே புண்ணாகி விட்டதாம்.
இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வர் ஆன பிறகு, எல்லீஸ் ஆர்.டங்கன் ஒரு முறை எம்.ஜி.ஆரை சந்திக்க வந்தாராம். அப்போது “லண்டனில் மிக வசதியாக இருந்தேன் ஆனால் இப்போது மிகவும் வறுமையில் இருக்கிறேன். ஆதலால் இங்கு ஊட்டியில் இருக்கும் எஸ்டேட்டை விற்கவேண்டிய நிலை வந்துவிட்டது. ஆனால் இதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கிறதாம். என்னால் விற்கமுடியவில்லை. நீங்கள்தான் எனக்கு உதவி செய்யவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தாராம்.
தனது உதவியாளர் ஒருவரை அழைத்து ஒரு பெட்டியை எடுத்து வரச்சொன்னார் எம்.ஜி.ஆர். அந்த பெட்டி நிறைய பணம் இருந்ததாம். “இதில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிறது. வைத்துக்கொள்ளுங்கள். எஸ்டேட்டில் இருக்கும் சட்டசிக்கலை களைய விரைவில் ஏற்பாடு செய்கிறேன்” என கூறினாராம்.
அப்போது டங்கன் “நான் அன்று உங்களை கொடுமைப்படுத்திவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என கூறினாராம். அதற்கு எம்.ஜி.ஆர் மிகவும் பெருந்தன்மையாக “நான் என்றோ அதனை மறந்துவிட்டேன்” என கூறினாராம்.
இதையும் படிங்க: பிச்சைக்காரன் 2 படம் இந்த டிவி சீரியலின் காப்பியா? விஜய் ஆண்டனி மீது மீண்டும் எழுந்த புகார்…