Cinema History
என்னோட எதிரியே இவன்தான்… இளையராஜாவை வம்புக்கு இழுத்த வைரமுத்து… என்ன நடந்தது தெரியுமா?
இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பல ரம்மியமான பாடல்களாய் தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இருவருக்குமிடையே மிகப் பெரிய விரிசல் விழுந்தது.
பல ஆண்டுகளாக இந்த விரிசல் குறித்து பல பேட்டிகளில் இவர்கள் இருவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் யாரும் வெளிப்படையான விளக்கத்தை கொடுக்கவில்லை. எனினும் ஒரு முறை ஒரு பேட்டியில் வைரமுத்துவிடம் “இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா, உங்களுக்குள் என்ன பிரச்சனை?” என கேட்டபோது அவர் “இளையராஜாவுக்கு வைரமுத்து பிரச்சனை, வைரமுத்துவுக்கு இளையராஜா பிரச்சனை” என்று பதிலளித்தார்.
இன்று வரை இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்குமிடையே இருக்கும் மிகப்பெரிய விரிசலுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஜி.மாரிமுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது வைரமுத்துவிடம் தான் உதவியாளராக பணியாற்றிய நாட்களில் இளையராஜாவை குறித்து வைரமுத்து தன்னிடம் பகிர்ந்துகொண்டவற்றை அந்த பேட்டியில் நேயர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு காலத்தில் வைரமுத்துவை இளையராஜா தனது மடியில் உட்கார வைத்து சோறூட்டினார். ஆனால் திடீரென அவரை தள்ளிவிட்டுவிட்டார். ஒரு நாள் ‘இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்” என்ற தொடரில் இளையராஜாவை குறித்து எழுதலாம் என்று முடிவெடுத்தார் வைரமுத்து.
‘கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக் காற்று உன் குத்தகையிலேயே இருக்கிறது’ என இளையராஜாவை குறித்து அதில் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் இளையராஜா இசையமைத்த ‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது. உடனே தான் எழுதிக்கொண்டிருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டார் வைரமுத்து. ‘இளையராஜாவை அழிக்கவே முடியாது, அவன் பெரிய ஆள்யா’ என புல்லரித்தபடி என்னிடம் கூறினார்” என்று ஜி.மாரிமுத்து அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
மேலும் பேசிய ஜி.மாரிமுத்து “ஒரு முறை வைரமுத்து என்னிடம் ‘எனக்கு சரியான எதிரின்னா அது இளையராஜா மட்டுந்தான்’ என்று மிகப் பெருமிதத்துடன் கூறினார். ‘இளையராஜாவுடன் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட திருப்தி அதன் பிறகு வேறு எந்த இசையமைப்பாளரிடமும் வரவில்லை’ என என்னிடம் மிக சலித்துக்கொண்டு கூறினார் வைரமுத்து” என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.