
சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு பாடல் காட்சிக்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், இந்தியன்2-வில் நடிப்பவருமான கமல்ஹாசன் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தனது சார்பில் இழப்பீடாக ஒரு கோடியை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் லைக்கா சுபாஷ்கரன் வெளிநாட்டிலிருந்து நேற்று சென்னை வந்தார். அதன்பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் மரணமடைந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சமும், காயமடைந்த 10 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.





