Cinema News
மோகனுக்கு டப்பிங் கொடுத்தது இந்த டாப் நடிகரின் நெருங்கிய உறவினரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
1980களில் பல இளம் பெண்களின் மனதை கொள்ளைக்கொண்ட வசீகர நடிகராக திகழ்ந்தவர் மோகன். இவர் பாலு மகேந்திரா கன்னடத்தில் இயக்கிய “கோகிலா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த மோகன், தமிழில் பாலு மகேந்திராவின் “மூடு பனி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார் மோகன். எனினும் மற்ற மொழிகளை விடவும் தமிழ் சினிமாவில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக அக்காலகட்டத்தில் இளம்பெண்கள் அவரை கனவுக்கண்ணனாகவே பார்த்தனர்.
ஒரு முறை மோகன் உடல் நிலை சரியில்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமக்கப்பட்டிருந்தபோது, அவரை பார்ப்பதற்கு பல இளம் பெண்கள் வந்திருந்தார்களாம். அந்த இடமே அப்போது பெண்கள் கல்லூரி போல காட்சியளித்ததாம். அந்த அளவுக்கு அவருக்கு பெண் ரசிகைகள் இருந்தார்களாம்.
மோகனின் வசீகரமான நடிப்பும் அழகும் பலரை மயக்கினாலும், அதனை விட அவருக்கு வசீகரமாக இருந்தது அவரது குரல்தான். மோகனின் தொடக்க காலத்தில் இருந்து தொடர்ந்து அதிகமான திரைப்படங்களில் அவருக்கு குரல் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர் என்பவர்.
எஸ்.என்.சுரேந்தர் ஒரு பாடகரும் கூட. தமிழில் பல சினிமா பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழின் டாப் நடிகராக திகழும் விஜய்யின் நெருங்கிய உறங்கினர் என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்! விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகரின் உடன் பிறந்த சகோதரர்தான் எஸ்.என்.சுரேந்தர்.
எஸ்.என்.சுரேந்தர் மோகனுக்கு மட்டுமல்லாது, விஜயகாந்த்தின் தொடக்க காலகட்ட திரைப்படங்களில் குரல் கொடுத்திருக்கிறார். அதே போல் ரகுவரன் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் கூட பல திரைப்படங்களுக்கு சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும் பிரதாப் போத்தன், ஆனந்த் பாபு, கார்த்திக் போன்ற நடிகர்கள் நடிக்க வந்த புதிதில் அவர்களுக்கு குரலாக இருந்தவர் எஸ்.என்.சுரேந்தர்தான்.
ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மோகனுக்கும் சுரேந்தருக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட, மோகன் தனது சொந்த குரலிலேயே பேசத் தொடங்கினார். ஆனால் மோகன் தனது சொந்த குரலில் பேசத்தொடங்கிய பிறகுதான் அவரது மார்க்கெட் சரிந்தது என்று கூட சில பேச்சுக்கள் உண்டு.