ரஜினிகாந்த் “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், “பைரவி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அதன் பின் அவரது வாழ்க்கையே உச்சத்துக்கு சென்றது. அவருக்கென்று மாபெரும் ரசிகர் கூட்டம் உருவானது. இது ரஜினிக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த மிகப்பெரிய அந்தஸ்து, ரஜினியின் பிரைவசியை கெடுத்தது. இதனால் ரஜினிகாந்த் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானார்.

அந்த சமயத்தில் அவரது குருவான பாலச்சந்தர், ரஜினிகாந்த்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அதன் பின் நன்றாக மனநிலை தேறி வந்தார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து யாரும் அறியாத ஒரு அரிய தகவலை கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் மிகப் பெரிய செல்வாக்குள்ள நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில், ஒரு நாள் சினிமா, தன் குடும்பம் என எல்லாத்தையும் விட்டுவிட்டு துறவறம் போய்விடலாம் என முடிவெடுத்தாராம். இந்த விஷயத்தை தனது குடும்பத்திற்கு கூட சொல்லாமல், தனது குருநாதரான பாலச்சந்தரிடம் முதலில் கூறலாம் என முடிவெடுத்தாராம்.

தான் ஏற்கனவே பாலச்சந்தர் படத்தில் நடிப்பதற்காக வாங்கி இருந்த அட்வான்ஸையும் திரும்ப கொடுத்துவிடலாம் எனவும் நினைத்திருக்கிறார். அதன் பின் பாலச்சந்தரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து தான் துறவறம் போகும் விஷயத்தை கூறிவிட்டு, அட்வான்ஸ் பணத்தை அவர் முன் வைத்திருக்கிறார்.
அப்போது பாலச்சந்தர், “நீ துறவறம் போகலாம் என முடிவெடுத்துவிட்டாய். நீ இப்போது வேறு யார் பேச்சையும் கேட்க மாட்டாய். நீ துறவறம் போ. ஆனால் அந்த துறவற வாழ்க்கை ஒரு கட்டத்தில் போர் அடித்துவிட்டால் நீ கோடம்பாக்கம் திரும்பி வா. வந்து என்னுடைய படத்தில் நடித்துக்கொடு. அதற்கான அட்வான்ஸாக இதனை வைத்துக்கொள்” என கூறி ரஜினிகாந்த்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

அதன் பின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். அவரிடம் தான் துறவறம் போவதாக கூற, இயக்குனர் முத்துராமன் ஷாக் ஆகிவிட்டாராம்.
“என்ன ரஜினி இப்படி சொல்றீங்க? உங்களை நம்பி இங்க எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா? தயாரிப்பாளரில் இருந்து திரையரங்குகளில் போஸ்டர் ஒட்டுபவர்கள் வரை உங்களை நம்பித்தான் அவர்களின் பிழைப்பே இருக்கிறது. நீங்கள் தனி ஆள் இல்லை” என கூறி அவரின் மனதை மாற்ற பார்த்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் மனம் மாறவில்லை.
ரஜினிகாந்த் துறவறம் போவதாக முடிவெடுத்த செய்தி எப்படியோ அவர்களது ரசிகர்களிடையே பரவிவிட்டது. அன்று மாலை 7 மணி அளவில் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன் அலைகடல் என அவரது ரசிகர்கள் கூடிவிட்டனராம்.

அப்போது அவர்களை வெளியே வந்து பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். அங்கே ஒரு ரசிகர் தனது தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு, “தலைவா, நீ படம் நடிக்கலைன்னா நான் என்னைய கொளுத்திக்குவேன் தலைவா” என்று கூறியிருக்கிறார்.
இதனை பார்த்து அரண்டுப் போய்விட்டாராம் ரஜினிகாந்த். “நான் சாகும் வரை சினிமாவில்தான் நடித்துக்கொண்டிருப்பேன். துறவறம் போக மாட்டேன். தயவு செய்து இப்போது எல்லாரும் வீட்டிற்கு கிளம்புங்கள்” என கையெடுத்து கும்பிட்டாராம் ரஜினி. ரசிகர்கள் தன் மேல் வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான பக்தியை உணர்ந்துகொண்ட பிறகுதான் தனது மனதை மாற்றிக்கொண்டாராம் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: இவர்தான் சார் என்னைய முதன்முதலா அப்படி கூப்பிட்டது- கேமரா மேனிடம் பெருமையாக சொன்ன அஜித்…
