Cinema News
இளையராஜா கோபத்துக்கு சூரிதான் காரணம்?… அப்படி என்ன நடந்தது தெரியுமா?
வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இதில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். அதே போல் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “காட்டுமல்லி” என்ற பாடல் வெளிவந்து ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. இத்தனை வருடங்கள் ஆகியும் இளையராஜாவின் மேஜிக் கொஞ்சம் கூட குறையவே இல்லை என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இசைஞானி இளையராஜாவுக்கு சமீப காலமாக அடிக்கடி கோபம் வருவதை நாம் பார்க்க முடிகிறது. பல பொது மேடைகளிலேயே சம்பந்தபட்டவரை திட்டிவிடுகிறார். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு “விடுதலை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இளையராஜா, வெற்றிமாறனை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் பலரும் ஆரவாரமாக கத்திக்கொண்டிருந்தார்கள். இதனை பார்த்து திடீரென கோபப்பட்ட இளையராஜா, “இப்படி கத்துனா, நான் எப்படி பேசமுடியும். கத்தாம இரு, இல்லைன்னா மைக்கை கொடுத்துட்டு போய்கிட்டே இருப்பேன்” என கூறினார். இதனை தொடர்ந்து ஆரவாரம் அமைதியானது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அந்தணன், இளையராஜா கோபப்பட்டது குறித்த ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.
“இளையராஜா கோபப்படுகிறார் என்று நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நூற்றாண்டின் மாபெரும் கலைஞன் என்றால் அது இளையராஜாதான். இசையுடனே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனுக்கு முன்பு சென்று தலைவா என்று கூச்சலிட்டால் அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அந்தணன், “அங்கு வந்த கூட்டம் ஒரு திரட்டப்பட்ட கூட்டம். பல ஊர்களில் இருந்து பிரியாணி போட்டு கூப்பிட்டு வந்த கூட்டம் அது. அவர்கள் கதாநாயகனின் பெயரை சொல்லும்போதெல்லாம் கத்துவார்கள். சூரி என்று சொன்னாலே கத்துவார்கள். இதனால் மேடையில் இருக்கும் அனைவருக்குமே எரிச்சல் வரத்தான் செய்யும். அதனை வேறு யாரும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இளையராஜாதான் வெளிப்படுத்துகிறார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிம்பு படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா?? மாஸ் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் களமிறங்கும் ATMAN… வேற லெவல்…