தமிழ் சினிமா இசையுலகில் பழம்பெரும் பாடகராக திகழ்ந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த தருணத்தில் பலரும் டி.எம்.எஸ் குறித்த நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் டி.எம்.எஸ் எவ்வாறு சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

டி.எம்.சௌந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவரது தந்தை கோயில் அர்ச்சகராக பணியாற்றியவர். ஆதலால் சிறு வயதிலேயே தந்தை பாடும் பஜனை பாடல்கள் டி.எம்.எஸ்-ஐ ஈர்த்தது. அதே போல் அப்போதைய தியாகராஜ பாகவதரின் பாடல்களும் பி.யு.சின்னப்பா பாடல்களும் அவரை ஈர்த்தன.
கையில் காசு இல்லை
இதனை தொடர்ந்து வளரும் பருவத்திலேயே மிகச் சிறப்பாக பாடக்கூடிய ஆற்றலை பெற்றிருந்தார் டி.எம்.எஸ். அப்போதே பல கோயில் விழாக்களில் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். ஒரு காலகட்டத்தில் முறையாக பாட கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் கையில் காசு இல்லை.

அந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான சினிமா தயாரிப்பாளர்களாக இருந்த குப்புசாமி ஐயர், பாபு ஐயர் போன்ற சிலரை தனது குரலால் ஈர்த்திருந்தார். ஆதலால் அவர்களின் பண உதவியுடன் ஒரு வித்வானிடம் பாடல் கற்றுக்கொண்டார்.
தனது 23 அவது வயதில் அரங்கேற்றம் செய்த டி.எம்.எஸ். அதன் பின் பல கச்சேரிகளில் பாடத் தொடங்கினார். ஆனால் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அக்காலகட்டத்தில் சினிமா, மக்களின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டிருந்த நேரம். ஆதலால் சினிமா பாடல்களை பாடினால்தான் பணம் கிடைக்கும் என்ற நிலை வந்தது.
எடுபிடியாக வேலை
ஆதலால் கோவை ராயல் தியேட்டர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் டி.எம்.எஸ். அங்கே ஒரு உதவியாளராக அவர் பணியில் இருந்தார். அங்கிருப்பவர்களுக்கு சேர் எடுத்துப்போடுவது, அறையை துடைப்பத்தால் அறையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளையே செய்து கொண்டிருந்தார். ஆனால் அவ்வப்போது அங்கே பாட்டுப்பாடிக்கொண்டே வேலை பார்த்துக்கொண்டிருப்பார் டி.எம்.ஸ்.

ஆதலால் அங்கிருப்பவர்களுக்கு டி.எம்.எஸ்-ன் குரல் வளம் தெரிந்திருந்தது. பி.யு.சின்னப்பா ஒரு முறை அவர் பாடுவதை கேட்டுவிட்டு, “இந்த பையன் பெரிய பாடகராக வருவான். என்னை விட நன்றாக பாடுகிறான்” என்று தனது நண்பர்களிடம் கூறுவாராம்.
முதல் வாய்ப்பு
இதனை தொடர்ந்து சில காலங்களுக்கு பிறகு அப்போது மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்த சுந்தர் ராவ் நட்கர்னி என்ற இயக்குனரின் வீட்டில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்தாராம் டி.எம்.எஸ். அங்கேயும் அவ்வப்போது பாடுவாராம். ஆதலால் சுந்தர் ராவுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் வளம் தெரிந்திருந்தது.

மேலும் அவ்வப்போது சுந்தர் ராவிடம் ,”எனக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வாங்கித் தாருங்கள்” என கேட்டுக்கொண்டே இருப்பாராம். இந்த நிலையில்தான் 1950 ஆம் ஆண்டு சுந்தர் ராவ் நட்கர்னி தான் இயக்கிய “கிருஷ்ண விஜயம்” என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் டி.எம்.எஸ்ஸை அறிமுகப்படுத்தினார். அவ்வாறுதான் அந்த படத்தில் இடம்பெற்ற “ராதே என்னை விட்டுப் போகாதே” என்ற பாடலை பாட டி.எம்.எஸ்க்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பல ஆண்டுகள் போராடி டி.எம்.சௌந்தரராஜன் பாடகராக ஆகியுள்ளார்.
இதையும் படிங்க: என்னடா பண்ணி வச்சிருக்க- ஆமீர்கான் முன்னிலையில் ரஜினி பட இயக்குனரை திட்டிய பாரதிராஜா?…
