மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து முட்டி மோதி, பல முயற்சிகள் செய்து கஷ்டப்பட்டு வாய்ப்புகளை பிடித்து நடிக்க துவங்கியவர் விஜயகாந்த். துவக்கத்தில் வில்லனாக கூட சில படங்களில் நடித்தார். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். இந்த திரைப்படம்தான் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

அதன்பின் பல திரைப்படங்களிலும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். ஆனாலும், ரஜினி, கமல் போல ஒரு ஸ்டார் ஹீரோவாக அவர் மாறவில்லை. அவரை அந்த இடத்திற்கு கொண்டு வர அவரின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் எம்.ஜி.ஆர் பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து விஜயகாந்தை நடிக்க வைத்தார். அப்படித்தான் ஸ்டார் ஹீரோவாக விஜயகாந்த் மாறினார்.

ஆனாலும், அவர் நடிக்கும் படங்கள் அப்போது ரூ.50 லட்சம் வரை மட்டுமே வசூல் செய்து வந்தது. அதாவது விஜயகாந்தை வைத்து படம் எடுத்தால் அதிகபட்சம் ரூ.56 லட்சம் வசூல் செய்யும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் கணக்காக இருந்தது. அப்போதுதான் கலைப்புலி தாணுவை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து ஹிட் அடித்த ‘ காலியா’ படத்தின் ரீமேக்கை நீங்கள் வாங்கி விஜயகாந்தை ஹீரோவாக போட்டு படம் எடுங்கள் என சொல்ல அப்படி உருவான திரைப்படம்தான் கூலிக்காரன். இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார். இந்த படம்தான் விஜயகாந்த் நடித்து ரூ.1 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாகும். அப்போது ரஜினி நடித்த படங்கள் ரூ.1 கோடி 20 லட்சம் வரை வசூல் செய்து வந்ததாம். கூலிக்காரன் படம் மூலம் கிட்டத்தட்ட ரஜினி படங்களின் வசூலை விஜயகாந்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் ஒரு ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
