Cinema News
இந்த படம் கண்டிப்பா ஓடாது- விநியோகஸ்தர் கைவிட்ட அஜித் படம்… ஆனா நடந்ததோ வேறு…
சினிமாவில் பல திரைப்படங்களின் வெற்றித்தோல்வியை முன் கூட்டியே கணிக்கமுடியாது என்பார்கள். விநியோகஸ்தர்கள் மொக்கை என்று சொன்ன திரைப்படங்கள் ஓடியதும் உண்டு. சூப்பர் படம் என்று பாராட்டிய படங்கள் படுதோல்வியடைந்ததும் உண்டு. இவ்வாறு பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு அஜித் திரைப்படத்தின் பிரிவ்யூவை பார்த்துவிட்டு “படம் சுமார், நிச்சயம் ஓடாது” என்று கூறியிருக்கிறார். ஆனால் அத்திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆகியுள்ளது. அது என்ன திரைப்படம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1996 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தார். அத்திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுக்காட்டினார். அப்போது அத்திரைப்படத்தை பார்த்த திருப்பூர் சுப்ரமணியம், சிவசக்தி பாண்டியனை அருகில் அழைத்து, “இந்த படம் ரொம்ப சுமாராதான் இருக்கு. கிளைமேக்ஸ் காட்சி மட்டுந்தான் நல்லா இருக்கு. நிச்சயமா இந்த படத்தை மக்கள் பார்க்கமாட்டாங்க” என கூறியிருக்கிறார்.
அதற்கு தயாரிப்பாளர், “இல்லை இல்லை, இந்த படம் நல்ல படம். நிச்சயமாக இத்திரைப்படம் வெற்றிபெறும்” என வாதிட்டிருக்கிறார். இதனை திருப்பூர் சுப்ரமணியம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. எனினும் வேண்டா வெறுப்பாக அத்திரைப்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அத்திரைப்படம் படுபயங்கரமான ஹிட் அடித்திருக்கிறது. திருப்பூர் சுப்ரமணியமே வியந்துபோகும் அளவுக்கு அத்திரைப்படத்தை மக்கள் கொண்டாடியிருக்கின்றனர்.
மேலும் அத்திரைப்படம் அஜித்தின் கெரியரில் மிக முக்கியமான திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாகவும் அமைந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் பெயர் “காதல் கோட்டை’. இத்திரைப்படம் இப்போதும் ரசிகர்களால் பேசப்பட்டு வரும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.