பொல்லாதவன் திரைப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2007 ஆம் ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் திவ்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், சந்தானம், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் பின்னணி இசையில் ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவானது.
ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கதிரேசன் இந்த படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் 15வது ஆண்டு விழா சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், நடிகை திவ்யா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். மேலும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் துவங்க உள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் வெற்றிமாறன்,”பொல்லாதவன் படத்திற்கு முதலில் இரும்புக் குதிரை என தலைப்பு வைத்ததாகவும், அப்போது பழைய பட தலைப்புகளை புது படங்களுக்கு வைக்கும் டிரெண்ட் உருவாகி இருந்தது”. இதனால் “தம்பிக்கு எந்த ஊரு என தலைப்பு வைக்கலாம்” என்று தயாரிப்பாளர் கூற, இயக்குனர் வெற்றிமாறன் கோபமாக “அதற்கு பொல்லாதவன் என்று கூட வைக்கலாம்” என வெற்றிமாறன் கூறியுள்ளார். “பொல்லாதவன் தலைப்பு நல்லா இருக்கு” என்று தயாரிப்பாளர் கதிரேசன் கூற, இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் இந்த சிக்கலில் இருந்து தன்னை மீட்பார் என நம்பி தனுஷிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளார்.

தனுஷிடம் இது தொடர்பாக பேசும் போது “பொல்லாதவன் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இருப்பினும் ரஜினி சாரிடம் இது தொடர்பாக பேசலாம்” என கூறியுள்ளார். இதனால் வெற்றிமாறனின் இரும்பு குதிரை என்ற தலைப்பு பொல்லாதவன் என மாற்றப்பட்டு படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
