Cinema History
நீங்க வேஸ்ட்!. நம்பியாரிடம் நான் கத்தி சண்டை போடுகிறேன்: எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட பானுமதி..
தமிழ் சினிமாவில், தமிழக அரசியல் வரலாற்றில் என்றென்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு பெயர் அதுதான் எம்ஜிஆர். அவர் இறந்தும், இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவரது புகழ் இன்றும் மங்கிப்போய் விடவில்லை. இப்போதும், எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து சொல் மந்திரமாகதான் அரசியலில் இருக்கிறது.
எம்ஜிஆர் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை, தொடர்ந்து பலரும் கூறி வருகின்றனர். அவரது சினிமா வாழ்வில், அரசியல் பயணத்தில் அவர் செய்த நல்ல விஷயங்கள், அவர் எடுத்த நடவடிக்கைகள் அவரது உதவிகள், மற்றவர்கள் மீது அவர் காட்டிய அக்கறை, அன்பு என பல விஷயங்கள் இன்றும் சுவாரசியமாக மக்களால் கவனிக்கப்படுகின்றன. அவர்களும் சிலாகித்து பேசுகின்றனர். எம்ஜிஆருடன் நான் பழகியவன் என்று சொல்வதே இன்று பலருக்கும் பெருமையான ஒரு விஷயம்தான்.
எம்ஜிஆர் நடித்த காலகட்டத்தில், அவருடன் பல படங்களில் நடித்தவர் நடிகை பானுமதி. மலைக்கள்ளன், மதுரை வீரன், நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற பல படங்களில் எம்ஜிஆருடன் பானுமதி நடித்திருந்தார். நடிகை, பாடகி, கதை வசனகர்த்தா, இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர் பானுமதி. அந்த வகையில் எம்ஜிஆருக்கு, பானுமதி சீனியர் என்பதால் அவரை மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என கெத்தாக அழைப்பார் பானுமதி. அதுவும் பலபேர் முன்னிலையில். எம்ஜிஆரை சின்னவர், வாத்தியார், தலைவர் என்றே சினிமா எடுத்த முதலாளிகளும், சக நடிகர்களும், இயக்குநர்களும் மரியாதையாக அழைத்த நிலையில், பானுமதி எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைப்பதை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தாலும் எம்ஜிஆர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
நட்பு ரீதியாக, பானுமதியை அம்மா என்றே எம்ஜிஆரும் அழைத்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்தில் கதாநாயகனாக எம்ஜிஆர், வில்லனாக நம்பியார் நடித்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பானுமதியை நம்பியாரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக எம்ஜிஆர் நம்பியார் கத்தி சண்டையிடும் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் நம்பியார் சண்டை காட்சி என்றாலே, அதை ரசித்து பார்க்க தனியாக ரசிகர் பட்டாளமே இருந்தது. அதுவும் எம்ஜிஆரின் வாள் வீச்சும், சுறுசுறுப்பும் அவர் காட்டும் துள்ளலும், வீரமும் தனி உற்சாகத்தையே ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விடும். அதனால், அந்த காட்சிகளை இயக்குனர் வெகுவாக ரசித்து படம்பிடித்துக்கொண்டிருந்தார்.
ஆனால், அன்று படப்பிடிப்பை அன்று சீக்கிரமாக முடித்துவிட்டு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்த பானுமதி, இவர்களது கத்தி சண்டை நீண்டுகொண்டே போனதால், பொறுமையை இழந்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் சென்று ‘மிஸ்டர் ராமச்சந்திரன், நம்பியாரிடம் இருந்து நீங்கள் என்னை காப்பாற்ற, நீண்டநேரம் ஆகும் போல இருக்கிறது. எனக்கும் கத்தி சண்டை தெரியும். அந்த கத்தியை என்னிடம் கொடுங்கள். நான் சீக்கிரமாக, நம்பியாரை தோற்கடித்து விடுகிறேன்’ என்று ஆவேசமாக கூறி இருக்கிறார். இதை கேட்டு எம்ஜிஆர் உட்பட படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்களாம்.