Cinema News
குடிக்க தண்ணீர் கொடுக்க மறுத்த ஊழியருக்கு எம் ஜி ஆர் கொடுத்த வினோத தண்டனை….
மக்கள் திலகம் எம்ஜிஆர் மிகச்சிறந்த மனிதர். பண்பாளர். சினிமாவில் நடிகராக இருந்த போதும் தமிழகத்தின் முதலமைச்சராக அவர் இருந்த போதும் அவர் செய்த பல நல்ல விஷயஙகள் இன்றளவும் மக்கள் மத்தியில் சுவாரசியமாக பேசப்படுவதாக இருக்கிறது.அதாவது அவரது நடவடிக்கைகள் மற்றவர்களை புண்படுத்தாத வகையில் இருக்கும், அதே வேளையில், செய்ய வேண்டிய விஷயத்தையும் மிக சரியாக செய்து, அவர்களது தவறை உணர்த்தியும் விடுவார். அப்படி ஒரு சம்பவம்தான் இது.
எம்ஜிஆர் நடிக்க வந்த புதிதில், நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று இருக்கிறார். மற்ற நடிகர்கள் நடிக்கும்போது, ஷெட்டுக்கு வெளியே காத்திருக்கிறார் எம்ஜிஆர். மீண்டும் அவர்கள் அழைக்கும்போது இல்லாவிட்டால், நடிக்கும் வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால், மணிக்கணக்கில் வெளியில் எம்ஜிஆர் காத்திருக்கிறார்.
அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அந்த நேரத்தில் அவ்வழியாக அந்த ஸ்டுடியோவில் பணிசெய்யும் அப்பன் என்ற ஊழியர் கையில் ஜக்கு மற்றும் டம்ளர்களை எடுத்து சென்றிருக்கிறார். அவரிடம் அண்ணே ரொம்ப தாகமாக இருக்கு, கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க என கேட்டிருக்கிறார் எம்ஜிஆர். உள்ளே பெரிய பெரிய நடிகர்கள் இருக்காங்க, அவங்களுக்கு ஜூஸ் கொண்டு போறேன், நீ வேற ஏம்பா என கூறிவிட்டு, அலட்சியமாக சென்றுவிட்டார் அந்த ஊழியர்.
அதற்கு பின், எம்ஜிஆர் பெரிய நடிகராகி, அந்த ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி, அந்த ஸ்டுடியோவுக்கு தனது அம்மா பெயரையும் வைத்துவிட்டார் எம்ஜிஆர். அப்போதும், அங்கு ஊழியராக இருந்த அப்பன், தாகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் அவமதித்த தன்னை எப்படியும் எம்ஜிஆர் வேலையை விட்டு அனுப்பி விடுவார் என, பயத்தில் இருந்திருக்கிறார். அப்போது, அப்பனை அழைத்த எம்ஜிஆர் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என கேட்டிருக்கிறார்.
அவர் 200 ரூபாய் என்று கூற இனிமேல் உங்கள் சம்பளம் 400 ரூபாய் என உயர்த்தி தந்திருக்கிறார் எம்ஜிஆர்.குடிக்க தண்ணீர் தராமல், தன்னை அவமதித்த ஸ்டுடியோ ஊழியரின் சம்பளத்தை இரட்டிப்பாக்கி, இப்படி வினோதமாக தண்டித்தவர் தான் எம்ஜிஆர். இப்படி தன்னை அவமதித்தவரை கூட தனது நல்ல குணத்தால், செயலால் எளிதில் தன்வசப்படுத்தும் வலிமை படைத்தவர்தான் எம்ஜிஆர். அந்த வள்ளல் குணம்தான் அவரது சிறப்பாக புகழ் பாடிக்கொண்டிருக்கிறது.