Cinema News
செருப்பு தைக்கும் தொழிலாளி வீட்டுக்கு திடீர் விசிட் செய்த எம்ஜிஆர்.. அதிர்ச்சியில் உறைந்து போன தொழிலாளி குடும்பம்!
தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், ஓய்வாக இருக்கும் நேரங்களில் தனக்கு வரும் கடிதங்களை அவரே எடுத்து பிரித்து பார்ப்பார். அப்படி ஒருநாள் கடிதங்களை பார்த்த போது அதில் திருமண அழைப்பிதழ் ஒன்று இருந்தது. அதில் இணைப்பு கடிதம் எதுவுமில்லை. அந்த அழைப்பிதழ் விவரங்களை வைத்து, யார் இதை அனுப்பியது என எம்ஜிஆர் விசாரிக்கச் சொன்னார்.
எனக்கு எல்லாமே எம்ஜிஆர் தான்
கட்சியினர் விசாரித்ததில், ராம் தியேட்டர் எதிரில் உள்ள ரோட்டோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர்தான் அந்த அழைப்பிதழை எம்ஜிஆருக்கு அனுப்பியிருப்பது தெரிய வந்தது. எல்லோரும் திருமண அழைப்பிதழை முதலில் குல தெய்வம் சாமிக்கு வைப்பதுதான் வழக்கம். எனக்கு எல்லாமே புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான். அதனால்தான் என் மகள் திருமண அழைப்பிதழை அவருக்கு அனுப்பி வைத்தேன் என்றார். அந்த செருப்பு தைக்கும் சின்ன கடையில் ஏராளமான எம்ஜிஆர் படங்களை ஒட்டி வைத்திருந்தார் அந்த தொழிலாளி.
நெகிழ்ந்து போன எம்ஜிஆர்
தன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல், தன் மீதுள்ள அபரிமிதமான அன்பால் அழைப்பிதழ் அனுப்பிய அந்த தொழிலாளியின் அன்பில் நெகிழ்ந்து போனார் எம்ஜிஆர்.
மணமக்களை வாழ்த்திய எம்ஜிஆர்
குறிப்பிட்ட நாளில், சரியாக முகூர்த்த நேரத்தில் அந்த தொழிலாளியின் வீட்டுக்கு சென்று காரில் சென்று இறங்கினார் எம்ஜிஆர். தொழிலாளியும், அவரது குடும்பத்தாரும், அங்கு திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்துப் போயினர். மணமக்களை வாழ்த்தி, பொன்னும் பொருளும் பரிசளித்த எம்ஜிஆர், அந்த தொழிலாளியின் நினைத்துப் பார்க்க முடியாத கனவை, நிறைவேற்றி விட்டு வந்தார்.
நல்ல குணங்களை மதிப்பவர்
எம்ஜிஆரை பொருத்த வரை, மனிதர்கள் வாழும் நிலையை பார்த்து அவர்களை மதிப்பவரல்ல. அவர்களது நல்ல குணங்களை பார்த்து, அவர்களை மதிப்பவர். மரியாதை செலுத்துபவர். அந்த வகையில், செருப்பு தைக்கும் தொழிலாளி என்றும் பாராமல், அவரது இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்திய வள்ளல் குணம் மிக்கவர் எம்ஜிஆர்.