Cinema History
நிஜ புலியோடு சண்டை போட்ட எம்.ஜி.ஆர்!.. வெற்றிக்காக இவ்வளவு ரிஸ்க்கா எடுக்குறது!..
சினிமாவில் அறிமுகம்:
50,60களில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், அதற்கு முன்பு அவர் கடந்து பாதை ஒன்றும் அவ்வளவு சுலபமானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரின் பாதைகள் பல முட்களும், தடைக்கற்களும் இருந்தது. அவற்றையெல்லாம் தாண்டிதான் அவர் முன்னேறினார். 7 வயதில் நாடகத்தில் நடிக்க துவங்கியவர் 27 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்தார். 35வது வயதில்தான் சினிமாவில் நுழைந்தார்.
சண்டை காட்சி:
சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. படப்பிடிப்பில் இயக்குனர்களாலும், சக நடிகர்களாலும் அவமானப்படுத்தப்பட்டார். நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றிதான் அவரின் கேரியரை மாற்றியது. அதன்பின் பல சரித்திர கதைகளில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக எம்.ஜி.ஆர் படம் எனில் வாள் சண்டை பிரமாதமாக இருக்கும் என நம்பியே ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தனர். தனது சண்டை காட்சிகளுக்காகவே ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆர் சண்டை காட்சிகளில் அதிக சிரத்தை எடுத்து நடித்தார்.
நிஜப்புலி:
எம்.ஜி.ஆர் நடித்து 1955ம் வருடம் வெளியான திரைப்படம் குலோபகாவலி. இந்த படத்தில் காதலியின் உயிரை காப்பாற்றுவதற்காக அபூர்வ மலரை எம்.ஜி.ஆர் பறிக்க செல்வது போன்ற காட்சியில் ஒரு புலியுடன் அவர் சண்டை போடுவது போல் காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சியை எடுப்பதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விவாதித்த இயக்குனர் ‘ஒரு நிஜ புலியின் முகத்தை க்ளோசப்பில் காட்டிவிட்டு மீது காட்சிகளுக்கு டம்மி புலியை பயன்படுத்திக்கொள்ளலாம்’ என சொல்லியிருக்கிறார்.
ஆனால், எம்.ஜி.ஆரோ ‘இதுவரை படம் நன்றாக வந்துள்ளது. எனவே, நிஜ புலியோடு சண்டையிட்டால் அந்த காட்சி சிறப்பாக இருக்கும்’ என சொல்லி இயக்குனரை சம்மதிக்க வைத்தார். ஜெமினி சர்க்கஸில் பேசி சங்கர் என்கிற புலியை கொண்டு வந்தார்கள். கூண்டிலிருந்து வெளியே வந்த புலி கட்டுப்பாடின்றி அங்கும் இங்கும் ஓடியது. பயிற்சியாளரின் கட்டளைகளை ஏற்க மறுத்தது. அதைப்பார்த்து பயந்து போன இயக்குனர் ‘இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்’ என எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரோ ‘வெற்றி வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்’ எனக்கூறி நிஜப்புலியோடு கட்டிப்புரண்டு சண்டை போட்டார். இந்த காட்சி தியேட்டரில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.