Cinema News
முதல் படம் ஹிட்டா?!.. பெரிய நடிகர்கள் பக்கம் போயிடாதீங்க!.. அப்புறம் நீங்க காலிதான்!..
திரையுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு பொதுவாக ஒரு பழக்கம் உண்டு. ஒரு இளம் இயக்குனர் முதல் படத்திலேயே ஹிட் கொடுத்துவிட்டால் உடனே அவரை அழைத்து ‘எனக்கு ஒரு கதை சொல்லுங்கள். இருவரும் சேர்ந்து ஒரு படம் செய்வோம்’ என நம்பிக்கை கொடுப்பார்கள். அந்த இயக்குனரும் ‘பெரிய ஹீரோவே நம் படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாரே’ என சந்தோஷப்படுவார்கள்.
அதோடு, அடுத்தக்கட்டத்தில் இருக்கும் நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்தால் ‘இல்லை சார் அந்த ஹீரோவோடு சேர்ந்து படம் பண்ண போறேன். இப்ப என்னால முடியாது’ என சொல்லி வரும் வாய்ப்புகளை தவறவிடுவார்கள். இவருக்கு படம் நடித்து கொடுப்பதாக சொன்ன ஹீரோவுக்கு கதையை உருவாக்குவார். இதில் சில மாதங்கள் போய்விடும். கதையை முடித்துவிட்டு அந்த ஹீரோவிடம் சென்றால் ‘இதை மாற்றுங்கள்.. அதை மாற்றுங்கள்’ என ஹீரோ அதில் சில கரெக்ஷனை சொல்வார்கள். அப்படியே சில மாதங்கள் போகும்.
அதற்குள் அந்த ஹீரோ அடுத்தடுத்து வேறு இயக்குனரிடம் கதைகேட்டு அது பிடித்துப்போய் அதில் நடிக்க போய்விடுவார். இப்படி சில மாதங்கள் போய்விடும். அந்த இயக்குனர் அந்த ஹீரோவை தொடர்பு கொண்டு கேட்டால் ‘இந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன். அடுத்த படத்தில் இணைவோம்’ என சொல்வார்கள். இப்படியே மொத்தமாக இரண்டு வருடங்கள் முதல் நான்கைந்து வருடங்கள் கூட அந்த இயக்குனர் படமே இல்லாமல் வீட்டில் இருப்பார்.
பல ஹீரோக்கள் இதை செய்து வருகின்றனர். ‘நேற்று இன்று நாளை’ எனும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்.ரவிக்குமார். இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் உடனே அவரை அழைத்து ‘எனக்கும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்க ஆசை. கதை ரெடி பண்ணுங்க’ என்றார். அப்படி உருவான திரைப்படம்தான் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. படப்பிடிப்பு அவ்வப்போது கொஞ்ச நாட்கள் நடக்கும். ஆனால், சிவகார்த்திகேயன் வேறு படங்களுக்கு நடிக்க சென்றுவிடுவார். அதன்பின் ஆறேழு படங்களில் அவர் நடித்துவிட்டார். ஆனால், இப்போதுதான் ‘அயலான்’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது. 8 வருடம் ரவிக்குமாரின் அடுத்த படம் வெளியாகவில்லை.
அதேபோல், ஜெயம்ரவியை வைத்து ‘அடங்கமறு’ எனும் ஹிட் படத்தை கொடுத்தவர் கார்த்திக் தங்கவேல். இப்படத்தை கார்த்தி அவரை அழைத்து எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்றார். இப்போதுவரை 4 ஆண்டுகளுக்கும்மேல் ஆகிவிட்டது. பல வருடங்களாக பல நடிகர்களிடமும் கார்த்திக் தங்கவேல் கதை சொல்லி பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. கார்த்தி கால்ஷிட் கொடுப்பார் என அவரும் காத்திருக்கிறார்.
அதேபோல், துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோரை வைத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஹிட் படத்தை கொடுத்தவர் தேசிங்கு பெரியசாமி. இவர் ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியே இவரை அழைத்து ஒரு கதை ரெடி பண்ண சொன்னார். அவரும் பல மாதங்கள் உழைத்து ஒரு கதையை உருவாக்கினார். ஆனால், ‘இந்த கதையை எடுக்கும் அளவுக்கு இவருக்கு திறமை இருக்கா?’ என்கிற சந்தேகம் ரஜினிக்கு வரவே அவரின் முடிவு மாறியது. சிறுத்தை சிவா, நெல்சன் என போய்விட்டார். இரண்டு வருடங்களாக அடுத்த படத்தை இயக்காமல் இருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.
ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் தனுஷிடம் சென்றார். 4 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் அடுத்த படத்தை இயக்கவில்லை. இத்தனைக்கும் ரசிகர்கள் கொண்டாடிய படம் அது. இப்போது மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து அவர் படம் இயக்கவுள்ளார்.
இன்னும் பல உதாரணங்கள் இருக்கிறது. ஒரு இயக்குனர் ஹிட் கொடுத்தவுடன் அடுத்தடுத்த படங்கள் இயக்கினால் மட்டுமே அவர் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும். 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டால் படம் கிடைக்காது. அப்படி படமே கிடைத்தாலும் அடிமாட்டு சம்பளம் கொடுப்பார்கள்.
இதை எப்போதுதான் இந்த ஹீரோக்கள் புரிந்துகொள்ள போகிறார்களோ!…