இன்று தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இன்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் பகிரப்படுகின்றன. விஜய் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னாடி அவர் என்னென்ன அவமானங்களை சந்தித்தார் என்பதை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.

நடிகனாக மாறிய விஜய்
குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்த விஜய் திடீரென்று நான் நடிகனாக வேண்டும் என்று அவர் தந்தையிடம் கூறிய போது முதலில் அதிர்ச்சியானார் எஸ் ஏ சந்திரசேகர். அதன் பிறகு நானும் ஒரு நடிகன் தான் என்பதை நிரூபிக்க அண்ணாமலை படத்தில் வரும் ரஜினியின் வசனத்தை கூறி அவரது தந்தையை மெய்சிலிர்க்க வைத்தார். அந்த ஒரு வசனம் தான் விஜயை இன்று இந்த இடத்தில் வந்து நிற்க வைத்து இருக்கின்றது.

முதல் படத்தில் எந்த ஒரு நடிகரும் சந்திக்கும் அவமானங்களை தான் விஜய்யும் சந்தித்தார். அதுவும் பல உருவ கேலிகளுக்கு ஆளானார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் நிறைய உருவ கேலிகளுக்கு ஆளானவர் விஜய் தான் என்று கூறுகிறார்கள். விஜய் ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கும் போது அந்த படத்தின் போஸ்டரையும் விஜயின் புகைப்படத்தையும் வைத்து ஒரு வார பத்திரிக்கை லாரியில் மாட்டிய தகர டப்பா மூஞ்சி என்று வெளிப்படையாகவே எழுதி இருந்தார்களாம்.
கதவை பூட்டிக் கொண்டு அழுத விஜய்
அந்த விமர்சனத்தை பார்த்த விஜய் நேராக வீட்டிற்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு அதையே நினைத்து மூன்று நாட்கள் அழுது கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை தான். அவர் கூறிய அந்த ஆறுதலான வார்த்தைகள் தான் விஜய்க்கு உந்துதலாக இருந்திருக்கின்றது. சினிமாவில் நடிக்க வந்து விட்டால் இப்படி ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இன்று உன்னை தூற்றியவர்கள் நாளை உன்னை ஏணி மேல் ஏற்றி அழகு பார்ப்பார்கள். இவை எல்லாம் தாங்கிக் கொண்டு தான் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று எஸ் ஏ சந்திரசேகர் விஜயிடம் கூறினாராம். எனினும் அந்த பத்திரிக்கை விளம்பரத்தை லேமினேஷன் செய்து தன் வீட்டில் இன்னமும் மாட்டி வைத்திருக்கிறாராம் விஜய்.

ஆனால் விஜயிடம் இப்படி கூறிவிட்டு எஸ்ஏ சந்திரசேகர் ஒரு 50 பேரை தன்னுடன் கூட்டிக்கொண்டு அந்த வார பத்திரிக்கை முன்னாடி சண்டை போட்டு போராட்டமே நடத்தினாராம். மேலும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திடமிருந்து மறு கடிதம் ஒன்றையும் எழுதி வாங்கினாராம். நாங்கள் எழுதியது தவறுதான் என்று எழுதிக் கொடுத்த பிறகுதான் அங்கிருந்து சந்திரசேகர் புறப்பட்டாராம்.
தொடரும் விமர்சனம்
அதன் பிறகு படங்களில் வாய்ப்பு கிடைத்ததா என்றால் இல்லை . அதனாலேயே தன் மகனுக்காக தானே படத்தை இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்த எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்து ஒரு ஆறு படங்களை இயக்கினார். ஆனால் அந்தப் படங்கள் பெரும்பாலும் அடல்ட் கண்டெண்டுகளாகவே இருந்தன. அதனாலேயும் மீண்டும் விமர்சனத்திற்கு ஆளானார் விஜய்.
அதனைத் தொடர்ந்து 90கள் ஆரம்பத்தில் விஜய்க்காண ஆல்பத்தை தயார் செய்து தன் மகனுக்காக சந்திரசேகரே வாய்ப்புக்காக பல இயக்குனர்களின் வீடுகளில் ஏறி இறங்கியிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் விஜயின் நடிப்பும் ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளானதால் சந்திரசேகர் அணுகிய இயக்குனர்கள் எல்லாம் விஜயை வைத்து படம் இயக்குவதை மறைமுகமாக தவிர்த்து விட்டனர். அந்த நேரத்தில்தான் சந்திரசேகருக்கு ஒரு யோசனை பிறந்தது. புதிய ஆர்டிஸ்ட்கள் இயக்குனர்களுக்கு எல்லாம் புகலிடமாக இருந்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

நேராக சந்திரசேகர் விஜயின் ஆல்பத்தை எடுத்துக்கொண்டு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சென்று விட்டார். இவர் வந்ததை அறிந்த ஆர் பி சவுத்ரி என்ன விஷயம் என்பதை அறிந்து கொண்டார். உடனே பக்கத்தில் வேறொரு கதையின் ஆலோசனையில் இருந்த விக்ரமனை அழைத்து இந்த கதைக்கு விஜயை வைத்து படத்தை தயாரிக்கலாம் என சொன்னாராம். காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது ஆர்.பி,சௌத்ரிக்கு இருந்த ஒரு மரியாதைதான். அந்தப் படம் தான் பூவே உனக்காக. அது விஜயின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட படமாக அமைந்தது.
விஜய்க்கு திருப்பு முனையை ஏற்படுத்தியவர்
இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் முன்பு விஜயை விமர்சித்தவர்கள் இந்த படம் வெளியான பிறகு அப்படியே புரட்டிப்போட்டு எழுதினார்கள். ‘ஒரு தரமான படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்திய விஜய்’ என்று எழுதினார்கள். இந்தப் படத்திற்கு பிறகு தான் விஜயை தேடி பல நல்ல நல்ல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இதன் காரணமாகத்தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மீது விஜய்க்கு எப்பவுமே ஒரு நன்றி உணர்வு இருந்து கொண்டே இருக்கிறதாம். அதன் காரணமாகவே தான் அந்த நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்க சம்மதித்தார் என்று கூறுகிறார்கள்.

இப்படித்தான் விஜய் ஆரம்பத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டு இருக்கிறார் .இன்று எப்பேர்பட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என்பதை கண்கூடாக நாம் பார்க்கிறோம். இன்னும் ஒரு படி மேலாக தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றப் போகும் விஜய் என்றும் கூறி வருகிறார்கள். எல்லாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
