Cinema News
மாவீரன் விமர்சனம்: அந்நியனாகும் அம்பி.. ஆனால் எந்த பிரச்சனைக்காக.. ஜெயித்தாரா சிவகார்த்திகேயன்?
ஃபேன் ஓடலைன்னா விரலை வச்சு சுத்துவேன் என அந்நியன் படத்தில் விக்ரம் சொல்வது போல எல்லாத்துக்கும் அட்ஜெஸ்ட் பண்ணி போகும் மனநிலையுடன் உள்ள சிவகார்த்திகேயன் மக்களுக்கான ஒரு பிரச்சனை காரணமாக அந்நியனாக மாறுவது தான் இந்த மாவீரன் படத்தின் கதை.
பலமே இல்லாத பீட்டர் பார்க்கர் எப்படி ஸ்பைடர் கடித்த உடன் பலசாலி ஸ்பைடர் மேனாக மாறுகிறாரோ விஜய்சேதுபதியின் குரல் கேட்க சிவகார்த்திகேயனுக்கு எப்படி வீரம் வருகிறது என்பது லாஜிக் இல்லை என்றாலும் ஃபேண்டஸி படமாக இயக்குநர் சிறப்பாகவே கொண்டு சென்றுள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சூப்பர் ஹீரோவாக மாற நினைத்த சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ படம் பெரியளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் மீண்டும் அந்த முயற்சியில் களமிறங்கி உள்ள சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் கை கொடுத்ததா? அல்லது கை விட்டதா? என்பதை பார்ப்போம்..
மாவீரன் விமர்சனம்
சென்னையில் உள்ள பூர்வக்குடி மக்களுக்கு ஹவுஸிங் போர்டு என்கிற பெயரில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருகின்றனர். ஆனால், அதிலும் ஊழல் வாதிகள் சும்மா விடுவார்களா? மட்டமாக அந்த கட்டிடத்தை கட்டித் தர அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் பாதிப்புகளையும் ஹீரோ கண்டுக்காமல் கடந்து சென்று கொண்டிருக்க, இடைவேளை காட்சியில் மக்களுக்காக அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வில்லன் மிஷ்கினை துணிந்து எதிர்க்கிறார் மாவீரன் சிவகார்த்திகேயன்.
அதுவரை அமைதியாக சொல்லப் போனால் பயந்தாங்கொள்ளியாக இருந்தவன் எப்படி திமிறி எழுகிறான் ஏன் அண்ணாந்து வானத்தை பார்க்கிறான், அவனுக்கு அந்த பலத்தை கொடுத்தது யார்? அவனுக்கு கேட்கும் குரல் யாருடையது? அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை காமெடி கலந்து விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி சொல்லி இருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின்.
காமெடி கலாட்டா
மண்டேலா படத்தில் கிராமத்தில் நடக்கும் அரசியலை நய்யாண்டியாக சித்தரித்து இயக்கி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இயக்குநர் மடோன் அஸ்வின் அந்த படத்தின் நாயகன் யோகி பாபுவை இந்த படத்திலும் கொண்டு வந்து சிவகார்த்திகேயன் உடன் காமெடி கலாட்டாவில் கோர்த்து விட்டுள்ளார்.
முதல் பாதி முழுக்க சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பக்காவான காமெடி ரோலர் கோஸ்டர் அரங்கேறி தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை வயிறு குலுங்க டாக்டர் படத்திற்கு பிறகு இவர்களது காம்பினேஷன் சிரிக்க வைத்துள்ளது.
பாசிட்டிவ்
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கம், பரத் சங்கர் இசை, சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் யோகி பாபுவின் நடிப்பு படத்திற்கு பெரிய பாசிட்டிவாக உள்ளது. மேலும், சிவகார்த்திகேயனுக்கு வீரத்தை கொடுத்து மாவீரனாக மாற்றும் அந்த விஜய்சேதுபதியின் குரல் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.
நெகட்டிவ்
மண்டேலா படத்தில் பேசியது போல அரசியலை அழுத்தமாக இந்த படத்தில் இயக்குநர் மடோன் அஸ்வினால் பேச முடியவில்லை என்றே தெரிகிறது. நடிகர் விஜய்யை போலவே சிவகார்த்திகேயனும் பேக்கேஜ் ரக படத்தை விரும்பி இருப்பது தான் இடையே இருவருக்கும் சண்டை என பேச்சுக்கள் அடிபட காரணம் என்று தெரிகிறது. முதல் பாதியில் சொல்ல வந்த மையக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இரண்டாம் பாதியில் பூர்வ குடி மக்களுக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க சிவகார்த்திகேயன் மாவீரன் அவதாரம் எடுத்தாலும் பெரிதாக கனெக்ட் செய்யவில்லை.
மாவீரன் இன்னமும் மகத்தானவனாக வந்திருக்கலாம்!
ரேட்டிங்: 3/5