Cinema History
நான் ஒன்னு நினைச்சி போனேன்.. விஜயகாந்த் வேற ஒன்னு பண்ணிட்டார்!.. லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்..
இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டவர் லிவிங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையில் பல முயற்சிகள் செய்தார். ஆனால், நடிகராக வாய்ப்பு வர தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானார். கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல அரசியல் படங்களில் லிவிங்ஸ்டன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். சுந்தர புருஷன் என்கிற படத்தில் ஹீரோவாக, ரம்பாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தவர் இவர். காமெடி, ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் ஆகிய வேடங்களில் அசத்தலான நடிப்பை கொடுத்தவர். சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களிலும் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். ஜிமிக்கி கம்மல், கண்ணானே கண்ணே, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இயக்குனராக வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. கதைகளை உருவாக்கி சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினேன். ஒருமுறை விஜயகாந்தை சந்தித்து கதை சொன்னேன். நின்று கொண்டே, நடந்து கொண்டே கைகளை ஆட்டி ஆட்டி கதை சொல்வது என் பழக்கம். பொறுமையாக என்னை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த் ‘நாளைக்கு வாங்க’ என்றார்.
சரி வேறு சிலரை வரவழைத்து கதை சொல்ல வைக்கப்போகிறார் என நினைத்தேன். அதேபோல், அடுத்தநாளும் சென்றேன். அங்கு மேலும் சிலர் இருந்தனர். கதையை நான் சொல்லிய போது விஜயகாந்த் ‘நல்லா இருக்குல்ல.. அதுக்கு பொருத்தமா இருக்கும்’ என்றார். நான் என் கதையைத்தான் சொல்கிறார் என நினைத்தேன்.
கதை சொல்லி முடித்தபின் விஜயகாந்த் ‘நாங்கள் இப்போது பூந்தோட்ட காவல்காரன் என்கிற படத்தை எடுக்கவுள்ளோம். அதில், உனக்கு ஒரு வேடம் இருக்கிறது. நீ நடி’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ‘சார் எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. என் கதை உங்களுக்கு பிடிக்கவில்லையா?’ எனக்கேட்டேன். உன் கதையை அப்புறம் பாத்துக்கலாம். இது ஒரு சின்ன ரோல் இல்லை. படம் முழுக்க நீ வருவ’ என சொன்னார். ‘யோசித்து சொல்கிறேன் சார்’ என சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன்பின் நண்பர்களிடம் பேசியபோது ‘டேய் இப்ராஹிம் ராவுத்தர் பிலிம்ஸ் படம், விஜயகாந்த் ஹீரோ. படம் முழுக்க நீ வருன்னு சொல்லி இருக்காங்க. போய் நடி’ என்றனர். அடுத்தநாள் சென்று ‘நான் நடிக்கிறேன் சார்’ என சொன்னேன். விஜயகாந்த் சந்தோஷப்பட்டார். அந்த படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படித்தான் நடிகராக மாறினேன்.
என்னை நடிகராக பார்த்து விஜயகாந்த் மட்டுமே. பாக்கியராஜ் என்னை உதவியாளராக பார்த்தார். ஆர்.பி.சவுத்ரி என்னை ஹீரோவாக பார்த்தார். எனக்கு இவர்கள் மூன்று பேரும்தான் கடவுள்கள். நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு அவர்கள் மூவருமே காரணம்’ என லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது! அதை பாராட்டியது யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க