Cinema History
தமிழ் சினிமாவில் முதன் முதலாக!. அட இத்தனையா?!.. சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் அன்பே வா!…
1950,60களில் தமிழ் சினிமாவின் ஜாம்பாவானாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் வசூலை வாரிக்குவித்தது. பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை கொடுத்தார். பல நூறு நாட்கள் படங்களையும் கொடுத்தார். எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தாலே அப்படம் ஹிட், நல்ல லாபம் என்கிற நிலை அப்போது இருந்தது. எனவே, பல சினிமா நிறுவனங்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க போட்டி போட்டது. ஆனால், எம்.ஜி.ஆரோ தேவர் பிலிம்ஸ், நாகி ரெட்டி, ஜெமினி பிக்சர்ஸ் என சில குறிப்பிட்ட சினிமா நிறுவனங்களில் மட்டுமே படம் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் பல சிறந்த திரைப்படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனம் ஏவிஎம். சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தையும் தயாரித்தவர்கள் இவர்கள்தான். சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட பல ஹீரோக்களையும் வைத்து அவர்கள் படங்களை தயாரித்தனர். ஆனால், அவர்களுக்கு எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கவில்லையே என்கிற எண்ணம் இருந்தது. நடிகர் அசோகன் மூலம் எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு பேச எம்.ஜி.ஆரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அப்படி உருவான திரைப்படம்தான் அன்பே வா. ஏவிஎம் நிறுவனத்திற்காக எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமும் இதுதான். கடைசி படமும் இதுதான்.
இந்த திரைப்படத்தில் பல ‘முதன் முறையாக’ இடம் பெற்றது. இப்போது பைண்டிங் ஸ்கிரிப்ட் என சொல்வார்கள். ஒரு படத்தின் முழு காட்சியையும் விவரித்து கதையை எழுதியிருப்பார்கள். எம்.ஜி.ஆர் சம்மதம் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படத்திற்கு பைண்டிங் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டது. ஆனால்,எம்.ஜி.ஆர் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டாலும் அதை படிக்கவில்லை. மெய்யப்பட்ட செட்டியார் இதை படித்தால் போதும். நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டாராம்.
அதற்கு முன் கருப்பு வெள்ளை படங்களையே ஏவிம் நிறுவனம் தயாரித்து வந்தது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த முதல் கலர் திரைப்படம் அன்பே வா.
எம்.ஜி.ஆர் படம் என்றாலே நம்பியார், அசோகன், மனோகர் என அசத்தலான வில்லன்கள் இருப்பார்கள். அதுபோக, பல முரட்டு ரவுடிகள் எம்.ஜி.ஆருடன் சண்டை போடுவார்கள். ஆனால், முதன் முதலாக வில்லனே இல்லாத ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார் என்றால் அது அன்பே வா திரைப்படம்தான்.
அதேபோல், எம்.ஜி.ஆர் படங்களில் அவர் யாரையும் காதலிக்க மாட்டார். கதாநாயகிதான் எம்.ஜி.ஆரின் நல்ல மனதை பார்த்து அவர் மீது காதல் கொள்வார். துவக்கத்தில் அவரின் காதலை ஏற்க மறுத்து ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் அதை ஏற்றுக்கொள்வார். ஆனால், அன்பே வா படத்தில் சரோஜா தேவியை எம்.ஜி.ஆர் காதலிப்பார். பல சேஷ்டைகள் செய்து அவரை இம்ப்ரஸ் செய்வார். இது எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. அவர் அப்படி காதல் செய்ததை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்படி ரசித்தனர்.
எம்.ஜி.ஆர் முதன் முதலாக இந்த படத்தில்தான் அதிக சம்பளம் பெற்றார். முதலில் இவருக்கு ரூ.3 லட்சம் சம்பளமாக பேசப்பட்டது. அதன்பின் இன்னும் கொஞ்சம் நாள் சேர்த்து கால்ஷீட் வேண்டும் என சொல்லி அவருக்கு மேலும் 25 ஆயிரம் சேர்த்து கொடுக்கப்பட்டது. அந்த காலத்தில் எந்த நடிகரும் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் பெறவில்லை.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகர்கள் மேக்கப் போடுவதற்கு ஏவிஎம் அரங்கில் ஏசி வசதி செய்யப்பட்ட அறை உருவாக்கப்பட்டது அன்பே வா படத்திற்குதான். எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவிக்காக மெய்யப்ப செட்டியார் இந்த வசதியை செய்து கொடுத்தார்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆர் தங்கியிருக்கும் வீட்டை ஏவிஎம் அரங்கில் மிகவும் அதிக செலவில் செட் போட்டார்கள். அந்த கலை வடிவம் இப்போது வரை சினிமா உலகில் சிலாகிக்கப்பட்டு பேசப்படும் ஒன்று.
அன்பே வா திரைப்படம் அப்போது 30 லட்சத்திற்கு வியாபாரம் செய்யபட்டது. தமிழ் சினிமாவில் அதுவரை எந்த திரைப்படமும் இந்த அளவுக்கு வியாபாரம் செய்யப்படவில்லை. அதேபோல், ஏவிஎம் நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் அதிக லாபத்தையும் இப்படமே கொடுத்திருந்தது.
இப்படி பல சாதனைகளை அன்பே வா திரைப்படம் படைத்தது.
இதையும் படிங்க: உயிரே போனாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!.. படப்பிடிப்பில் தகராறு.. ஜெ.வை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்…