தமிழ் சினிமாவில் இயக்குனராக கதாசிரியராக இருந்தவர் கலைஞானம். முதன் முதலில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைத்ததே இவர்தான். ஆரம்பத்தில் வில்லன், இரண்டாவது நாயகனாக நடித்து வந்த ரஜினியை பைரவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய பெருமை கலைஞானத்தையே சேரும்.
அவர் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் குறத்தி, குறவன்களை பற்றிய ஒரு கதையை சொல்லப் போனாராம். அந்த கதையை கேட்ட கோபாலகிருஷ்ணன் ‘ நானும் நீண்ட நாளாக இந்த மாதிரியான கதையை தான் பண்ண வேண்டும் ’ என சொன்னாராம்.

அந்த படத்திற்கு குறத்தியாக பத்மினியும் குறத்தி மகனாக சிவக்குமாரும் நடித்தார்களாம். படம் 1000 அடி வரைக்கும் எடுத்திருந்த நிலையில் படப்பிடிப்பிற்கு வினியோகஸ்தரர்கள் பல பேர் கூட்டாக சேர்ந்து வந்தார்களாம். நேராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் ‘இது நாள் வரைக்கும் நீங்கள் எடுத்த எந்த கதைக்கும் நாங்கள் எதிராக நின்றதில்லை. ஆனால் இப்போது குறத்திமகன் படத்தை எடுத்தால் யார் வந்து அந்த படத்தை பார்பார்கள், எங்களுக்கு நஷ்டமாகிவிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பிறகு கோபாலகிருஷ்ணன் கலைஞானத்திடம் இந்த படத்தை அப்படியே ஆறப்போட்டுவிடுவோம் என்றும் கொஞ்ச நாள் கழித்து எடுக்கலாம் என்று சொன்னாராம். அவர் சொன்னபடியே மீண்டும் குறத்தி மகன் படத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் பத்மினி திருமணமாகி அமெரிக்கா சென்று விட்டாராம்.

அவருக்கு பதிலாக கே.ஆர்.விஜயா நடிக்க ஜெமினி கணேசன் குறவனாக நடித்தாராம். மேல் வீட்டு ஜாதிக்காரன் பையனாக கமலை நடிக்க வைத்திருக்கிறார்கள். குறத்தி மகனாக மாஸ்டர் ஸ்ரீதரை நடிக்க வைத்திருக்கின்றனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
