Cinema History
இறந்துபோன மனைவி முகத்தை கூட பார்க்க முடியலயே!… எம்.ஜி.ஆர் வாழ்வில் இவ்வளவு சோகமா!..
1950,60களில் தமிழ் திரையுலகில் முக்கிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தவர். ஆக்ஷன் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து முன்னணி ஹீரோவாக மாறியவர். ஒருகட்டத்தில் அரசியல் கட்சியையும் துவங்கி தமிழகத்தின் முதல்வர் பதவியிலும் அமர்ந்தார். மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார்.
எம்.ஜி.ஆர் தங்க தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர் இல்லை. முன்னணி ஹீரோவாக மாறுவதற்கு முன் எம்.ஜி.ஆர் அவரது வாழ்வில் சந்தித்த துன்பங்கள், அவமானங்கள். சோகங்கள் கணக்கில் அடங்காதது என்பது பலருக்கும் தெரியாது. குடும்ப வறுமை காரணமாக தனது ஏழாவது வயதில் அன்னையை பிறந்து நாடகத்துக்கு போனவர் அவர். நாடக அரங்கிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பதால் பல மாதங்கள் அம்மாவை பார்க்கவே முடியாது. இப்படி தாய் பாசம் கிடைக்காமல்தான் வாழ்ந்தார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும்போது பல அவமானங்களை சந்தித்தவர் 10 வருடங்கள் போராடித்தான் ஹீரோவாக மாறினார்.
எம்.ஜி.ஆர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் சதிலீலாவதி. அப்படத்திற்கு பின் இரு சகோதரர்கள், மாயா மச்சிந்த்ரா, அரிச்சந்திரா, பிரகலாதா, சீதா ஜனனம், அசோக்குமார், தமிழறியும் பெருமாள், தாசிப்பெண், மீரா, ஸ்ரீமுருகன் என பல படங்களில் நடித்தார். ஆனால், எல்லாவற்றிலும் சின்ன சின்ன வேடங்கள்தான் அவருக்கு கிடைத்தது. எப்படியாவது ஹீரோவாக நடித்துவிட வேண்டும் என அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது(1939) அவருக்கு பார்கவி என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவருக்கு தங்கமணி என்கிற பெயரும் உண்டு.
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. ஜப்பான் நாட்டு விமானங்கள் சென்னையில் குண்டு வீசப்போகிறது என தீயாக செய்திகள் பரவியது. எனவே, மக்கள் பீதியில் இருந்தனர். எம்.ஜி.ஆரும், அவரின் சகோதரர் சக்கரபாணியும் அவர்களின் மனைவிகளை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சொந்த ஊருக்கு சென்ற பார்கவி மாரடைப்பில் மரணமடைந்தார். மனைவி இறந்துபோன செய்தி கேட்டு எம்.ஜி.ஆர் துடிதுடித்துப்போனார். எம்.ஜி.ஆர் அங்கு செல்வதற்கு முன் பார்கவியை அடக்கம் செய்துவிட்டனர். இதனால் கடைசியாக தனது மனைவியின் முகத்தை கூட அவரால் பார்க்க முடியாமல் போனது. இந்த சோகம் எம்.ஜி.ஆரை பெரிதும் பாதித்தது. அவரை அவரின் அன்னை சத்யாவும், சக்கரபாணியும் தேற்றினர்.
பார்கவி 1942ம் வருடம் மரணமடைந்தார். அதாவது எம்.ஜி.ஆரின் முதல் திருமண வாழ்க்கை 4 வருடங்கள் மட்டுமே நீடித்தது. அடுத்து அவர் சதானந்தவதி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் காசநோயால் பாதிக்கப்பட்டு 1962ம் வருடம் மரணமடைந்தார். சதானந்தவதி நோய்வாய் பட்டு படுக்கையில் இருந்தபோதே அவரின் சம்மதத்துடன் ஜானிகியை எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் வேடம்… பேசிய முதல் வசனம்… வெளிவராத தகவல்கள்!..