Cinema History
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கிற்குப் பதில் நடிக்க வேண்டியது இவர் தான்… வாய்ப்பு தவறியது எப்படி?
நல்ல உயரமான தோற்றத்துடன் சிவந்த நிறம், புன்சிரிப்பு தவழும் நடிகர் சுரேஷ். வசீகரமான தோற்றமும், பிரத்யேக குரல் வளமும் இவருக்குக் கூடுதல் சிறப்பு. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். 300க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழிப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
80களில் இவர் தான் கனவுலக நாயகர். ஹேண்ட்சம் ஹீரோ என்று அனைவராலும் கொண்டாடப்பட்டவர். தொழில்நுட்பக் கலைஞராக வந்து நடன இயக்குனர் ஆகி கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார்.
பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இவர் பாடும் பூந்தளிர் ஆட என்ற காதல் கீதம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இவர் நடிப்பு ரொம்பவே கியூட்டாக இருக்கும்.
கோழிகூவுது படத்தில் ஏதோ மோகம் ஏதோ தாபம் என்று காதலின் தாபத்தை உண்டாக்கி இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். வெள்ளை ரோஜாவில் சோலைப்பூவில் மாலைத் தென்றல் என ரசிகர்கள் மத்தியில் காதல் கிளுகிளுப்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கினார்.
தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் ஆகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தந்தை, தொழில் அதிபர், வில்லன் என பன்முகக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
26.08.1963 அன்று ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில் கோபிநாத் ராதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் மைசூர் சேஷைய்யா சுரேஷ் பாபு நாயுடு. இவரது முன்னோர்கள் மைசூர் சமாஸ்தானத்தின் உறவினர்கள். இவரது தந்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்.
இவரது தாத்தா திரைப்படங்களுக்குக் கதைகள் எழுதுவதில் வல்லவர். தந்தையின் வேலை காரணமாக சுரேஷ் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். தந்தை தேவர் பிலிம்ஸில் துணை இயக்குனராக பணி புரிந்தார். பள்ளி விடுமுறை நாள்களில் தந்தையுடன் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்று வந்தார் சுரேஷ்.
இந்த சூழ்நிலையால் கலையும் அவருடன் கூடவே வளர்ந்தது. இளம் வயதிலேயே தொழில்நுட்பக்கலைஞராக திரைத்துறையில் நுழைந்தார். நடனப்பள்ளிக்குச் சென்று சம்பத் மாஸ்டரிடம் திரைத்துறைக்கு ஏற்ற நடனம் கற்றுக் கொண்டார். குடும்பச்சூழலை உணர்ந்து தனது 16வது வயதிலேயே துணை இயக்குனராக, தொழில்நுட்பக்கலைஞராக, நடன இயக்குனராக என படிப்படியாக உயர்ந்து வந்தார்.
சக நண்பர்களின் ஆலோசனையின் பேரில் திரைத்துறையில் நடிகராக முயற்சித்தார். அப்போது இயக்குனர் ஸ்ரீதர் புதுமுகங்களைத் தேடுகிறார் என்று கேள்விப்பட்டார். அப்போது அங்கு சென்ற போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 1981ல் சந்தானபாரதியும், பி.வாசுவும் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் பன்னீர் புஷ்பங்கள் படத்தை இயக்கினர்.
இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுரேஷூக்குக் கிடைத்தது. முதல் படத்திலேயே விடலைப்பருவத்தில் உண்டாகும் காதல் நெருப்பை அப்படியே நடிப்பில் காட்டி அசத்தினார். கவர்ச்சி, கோபம் என நவரசங்களையும் வெளிப்படுத்தினார். படத்தில் பாடல்கள் அத்தனையும் செம சூப்பர் ரகங்கள்.
கோடை கால காற்றே, ஆனந்த ராகம், பூந்தளிர் ஆட என பாடல்கள் ஒவ்வொன்றும் முத்தானவை. தொடர்ந்து திரைவாய்ப்புகள் வந்து குவிந்தன. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பன்னீர்புஷ்பங்கள் படத்தில் நடித்து வந்ததால் அந்த வாய்ப்பு கைநழுவியது. அதன்பிறகு அந்தப் படம் கார்த்திக்கிற்குப் போனது.
கோழிகூவுது படத்தில் தபால்காரராக அப்பாவி வேடத்தில் நடித்தார். துணை, வெள்ளை ரோஜா, அபூர்வ சகோதரிகள், உன்னை நான் சந்தித்தேன், நான் பாடும் பாடல், ராஜா நடை, வெள்ளைப்புறா ஒன்று, நவரக்கிரக நாயகி, ஆலயதீபம், உரிமை, குங்குமக் கோடு, மௌனம் கலைகிறது, ஆகாயத்தாமரைகள், மருமகள், மரகத வீணை போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.
பூக்களைப் பறிக்காதீர்கள், உனக்காகவே வாழ்கிறேன், இனிய உறவு பூத்தது, பூமழை பொழியுது, மங்கை ஒரு கங்கை என நதியாவுடன் இணைந்து சுரேஷ் நடித்த படங்கள் அனைத்தும் முத்திரை பதித்தன.
சுரேஷ், நதியா கடைசியாக இணைந்து நடித்த என் வீடு என் கணவர் படத்தில் தான் நடிகர் அஜீத் சிறுவனாகத் தோன்றி அறிமுகமானார். புதுவசந்தம் படத்தில் சித்தாராவின் ஜோடியாக நடித்தார். வீட்ல விசேஷங்க, தாலிபுதுசு படத்திலும் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். அம்மன் படத்தில் கம்பேக் கொடுத்து வரவேற்பைப் பெற்றார். கிழக்கு கடற்கரை சாலை படத்தில் வில்லனாக நடித்தார். அசல், தலைவா, காதலில் சொதப்புவது எப்படி, சகாப்தம், மோகினி என பல புதிய பரிணாமங்களில் நடித்திருந்தார். ஆசை படத்தில் அஜீத்துக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் இவர் தான்.
லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் குஷ்பூவின் ஜோடி இவர் தான். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். 1990ல் பாடகி அனிதாவை காதலித்துக் கரம்பிடித்தார். இவர்களுக்கு நிகில் சுரேஷ் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது. மனைவி மகனுடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். எழுத்தாளரான ராஜஸ்ரீயை மணமுடித்தார்.