Cinema History
சினிமாக்காரனை கொண்டு வந்து அரசியல்ல நிறுத்தாதே!… அப்போதே சொன்ன எம்.ஆர்.ராதா
நடிகவேள் எம்ஆர் ராதாவின் படங்கள் என்றாலே அது மிக மிக வித்தியாசமாகவும், நெத்தி அடி வசனங்களாகவும், பகுத்தறிவைத் தட்டி எழுப்பும் விதத்திலும் இருக்கும். படத்தில் மட்டுமல்ல. நிஜத்திலும் இவர் ஹீரோ தான் என பலமுறை நிரூபித்துள்ளார். அப்படி ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
நடிகர் மோகன்லாலிடம் உங்களுக்குப் பிடித்த இந்திய நடிகர் யார் என கேட்டால், அவர் டக்கென்று சொல்வது நடிகவேள் எம்.ஆர்.ராதாவைத் தான். நாடகம் என்பது வெறும் பக்தி, காதல், புராணம் என்று தான் இருந்தது. அதை மாற்றி பகுத்தறிவு, சீர்திருத்தம் என கொண்டு வந்தவர் எம்.ஆர்.ராதா.
நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான். சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான். உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒண்ணு தான் என தைரியமாகப் பொதுமேடையில் முழக்கம் இட்டவர் எம்.ஆர்.ராதா.
சினிமா மோகம் பிடித்து ஆடுபவர்களைப் பார்த்து ராதா இப்படி சொல்கிறார்.
பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான். அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பார்க்காதே. அது ரொம்ப அசிங்கம். அவனை அரசியலுக்கு கூட்டி வந்து அழிஞ்சிடாதே. நீ அவனுக்குக் காசு கொடுக்குற… அவன் நடிக்கிறான். அவ்ளோ தான். உன் வேலைக்காரன் அவன். அவனை தலைவன்னு கொண்டாடாதே. அசிங்கம்… அவமானம் என்றார்.
பெரியாருக்கும், ராதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பகுத்தறிவு என்பதை மூச்சாகக் கொண்டு இருவரும் பல துணிச்சலான காரியங்களை செய்தனர். இதனால் பழி, பாவங்களைச் சந்தித்தனர். ராதாவின் நாடகங்களில் அம்பு போன்ற கூரிய வசனங்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பின.